கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் தரோயா அல்வியை செமெந்தா சட்டமன்ற உறுப்பினர் இருக்கையை காலி செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிலாங்கூர் பி.கே.ஆர் தலைவர் அமிருதின் ஷாரி.
முன்னாள் சிலாங்கூர் பி.கே.ஆர் மகளிர் தலைவரான தரோயா, பி.கே.ஆர் கட்சியிலிருந்தும், சிலாங்கூர் துணை சபாநாயகர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவிப்பு செய்ததை அடுத்து அமிருதின் இவ்வாறு கூறியிருக்கிறார்.
“டாக்டர் தரோயாவுக்கு ஏதேனும் சுயமரியாதை இருந்தால், உடனடியாக மாநில சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பி.கே.ஆர் கட்சியிலிருந்து தரோயா வெளியேறியது, கடந்த 14வது பொதுத் தேர்தலில் பக்காத்தானுக்கு வாக்களித்த மக்கள் ஆணைக்கு துரோகம் இளைக்கும் நடவடிக்கையாக அமிருதீன் விவரித்தார்.
“பி.கே.ஆர் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த செமெந்தா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தரோயா அல்வியின் நடவடிக்கைகளை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.”
“இந்த செயல் மக்களுக்கு துரோகம் இழைக்கும் ஒரு நடவடிக்கையாகும். கடந்த 14வது பொதுத் தேர்தலின் மூலம் சிலாங்கூரை ஆட்சி செய்ய பக்காத்தான் ஹராப்பானுக்கு தெளிவான ஆணையை வழங்கியுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
தரோயாவின் பதவி விலகலை சிலாங்கூர் மாநில சட்டமன்ற அலுவலகம் நிர்வகிக்கும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதீன் தெரிவித்தார்.
“அரசியல் முதிர்ச்சி இல்லாத இது போன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளைக் கண்டு பி.கே.ஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து பி.கே.ஆர் இயந்திரங்களும், குறிப்பாக பி.கே.ஆர் கிளையின் தலைவர்கள் வெறுப்பு அடைந்துள்ளார்கள் என்று நான் நம்புகிறேன்.”
“பி.கே.ஆர் மற்றும் சிலாங்கூர் பாக்காத்தான் கட்சி, மக்களின் ஆணையை மதிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய உறுதிபூண்டுள்ளன” என்று அவர் கூறினார்.
தரோயா கட்சியிலிருந்து வெளியேறியதால், சிலாங்கூர் தொகுதியில் பி.கே.ஆர் இருக்கை 18 ஆன போதிலும் அது பக்காத்தான் ஹராப்பானில் மிகப்பெரிய கட்சியாகவே உள்ளது.
இன்றுவரை, 56 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபையில் பாக்காத்தான் இன்னும் 42 இடங்களைக் கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது பி.கே.ஆரில் இருந்து அஸ்மினுக்கு ஆதரவாக இருக்கும் இன்னும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.