சுயநல அரசியல்வாதிகளுக்கு நாட்டை பற்றிக் கவலையில்லை

இராகவன் கருப்பையா- ஒரு நாடு பொருளாதார ரீதியில் வளப்பமடைவதற்கு அதன் குடி மக்கள்  உழைப்பை முதன்மையான மூலதனமாகப் போடவேண்டியுள்ளது. இதற்கு ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் உள்ளவர்களை நல்ல உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இதனை நடைமுறையில் செயல்படுத்துவதற்கு அரசியல்வாதிகளின் பங்கு அளப்பரியது என்றால் அது மிகையில்லை. ஏனெனில் நேர்மறையான முயற்சிகளுக்கு அவர்கள் ஊக்கமளிக்கவும் முடியும் அத்தகைய முன்னெடுப்புகளை அவர்கள் சீர்குலைக்கவும் முடியும்.

சமீப காலமாக நம் நாட்டில் நிகழ்ந்து வரும் பல சம்பவங்கள் சுயநல அரசியல்வாதிகளால் எந்த அளவுக்கு திசை திருப்பப்பட்டு நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்துகிறது என்று பார்க்கும் போது வேதனையாகத்தான் உள்ளது.

அண்மையில் தெலுக் இந்தானில் நடைபெற்ற ஒரு சீன கலாச்சார நிகழ்ச்சியில் ஒரு சிலர் சீனாவின் தேசியக் கொடிகளை ஏந்தியது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சில சீன நாட்டுப் பிரஜைகள்தான் தங்கள் கொடிகளை ஏந்தினர். உள்நாட்டவர் அவ்வாறு செய்யவில்லை,” என்று விளக்கமளித்த ஏற்பாட்டார்கள் அதற்கு மன்னிப்பும் கோரினார்கள்.

இருந்த போதிலும் பாஸ் கட்சியினர் விட்டபாடில்லை. “மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. மலாய்க்காரர்களை அது சங்கடப்படுத்துகிறது,” என்றும் “நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க அரசாங்கம் தவறிவிட்டது,” என்றும் குற்றஞ்சாட்டி விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கியுள்ளனர்.

வழக்கம் போல அம்னோ இளைஞர் தலைவர் அக்மாலும் தன்னுடைய பாணியிலேயே ‘தாண்டிக் குதிக்கிறார்’.

எல்லா நாடுகளிலும் இவர்களைப் போன்ற சிந்தனையுடையவர்கள் இருந்தால் உலகின் எந்தப் பகுதியிலும் மலேசியக் கொடிக்கு இடமிருக்காது. எவரெஸ்ட் மலையின் சிகரத்தை அடையும் மலேசியர்கள் கூட ‘ஜாலூர் கெமிலாங்’ஙை அங்கு உயர்த்திக் காட்டி படமெடுக்க முடியாது.

வெளிநாடுகளில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெறும் நம் சாதனையாளர்களும் மலேசியக் கொடியை பையிலிருந்து வெளியே எடுக்கவே முடியாது.

ஆக, “அந்நியர்கள் தங்களுடையக் கொடிகளை ஏந்துவது தவறில்லை” என்று விளக்கமளித்த சுற்றுலாத் துறையமைச்சர் தியோங் கிங் சிங், “இவ்விவகாரத்தை பாஸ் கட்சியினரைப் போல நாம் அனுகினால் சுற்றுப்பயணிகளின் வருகையை அது பாதிக்கும்” என்று கூறுவதிலும் நியாயம் இருக்கிறது.

ஏற்கெனவே, சமயத்தைக் காரணம் காட்டி மாநிலம் முழுவதிலும் உள்ள ‘மெக்னம்,’ ‘டோட்டோ,’ ‘கூடா,’ போன்ற சூதாட்ட மையங்களை கெடா, பெர்லிஸ் அரசாங்கங்கள் இழுத்து முடியதால் தாய்லாந்து அரசாங்கத்திற்கு அது சாதகமாக அமைந்துள்ளதையும் நாம் மறுப்பதற்கில்லை.

வார இறுதி நாள்களிலும் நீண்ட விடுமுறைகளின் போதும் ஆயிரக் கணக்கான மலேசியர்கள் தாய்லாந்து எல்லைக்குள் நுழைந்து மில்லியன் கணக்கான ரிங்கிட்டை அங்கு செலவு செய்கின்றனர் எனத் தரவுகள் காட்டுகின்றன.

கடந்த மாதத்தில் ஒரு நீண்ட விடுமுறையின் போது தாய்லாந்து எல்லையைக் கடந்த மலேசிய சுற்றுப் பயணிகள் 130 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் செலவு செய்துள்ளனர்.

இதனால் மலேசிய நாணயத்தின் மதிப்பு சரிவுகாண வாய்பிருக்கிறது என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

எதிர்வரும் தீபாவளி விடுமுறைகளின் போதும் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் தாய்லாந்திற்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மேலும் பல மில்லியன்களை அந்நாட்டிடம் மலேசியா இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பாஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் சமய அடிப்படையிலான கெடுபிடிகள் அதிகமாக இருப்பதால்தான் நம் நாட்டுக்கு இந்த பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்பதில் ஐயமில்லை. இருந்த போதிலும் இதைப்பற்றி அவர்களுக்கு வருத்தமே இல்லை.

தென் தாய்லாந்தின் எல்லைப்புற நகரான ஹட்யாயில், மிகப்பெரிய சூதாட்ட மையம் ஒன்றை அமைப்பதற்கான ஒரு திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

அத்திட்டம் செயலாக்கம் கண்டவுடன் வட மாநிலங்களின் பொருளாதாரம் மேலும் கரைந்தோட வாய்ப்பிருக்கிறது என்பதையும் நாம் மறுக்க இயலாது.

இந்நிலையில் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றினால் கெந்திங் மலையில் உள்ள சூதாட்ட மையங்களை இழுத்து மூடுவது பற்றியும் பாஸ் கட்சியினர் பேசித் திரிகின்றனர்.

ஆக மலாய்க்காரர்களின் ஆதரவைத் திரட்டி அரசியல் ஆதாயம் பெறத் துடிக்கும் சுயநல அரசியல்வாதிகளுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அக்கறையில்லை என்பதையே இது புலப்படுத்துகிறது.