இராகவன் கருப்பையா- நாட்டின் மூத்த அரசியல்வாதி எனும் போதிலும் மற்றவர்களை தரக்குறைவாகப் பேசும் குணம் மாறாத முன்னாள் பிரதமர் மகாதீரின் போக்கு நமக்கு ஏமாற்றமளிக்கிறது.
துணப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் தம்மை இழிவுபடுத்தும் வகையில் ‘குட்டி’ என விமர்சனம் செய்துவிட்டார் என்று குற்றஞ்சாட்டி அவர் மீது மகாதீர் வழக்குத் தொடுத்துள்ளது நாம் அறிந்ததே.
“நான் ஒரு அரசியல்வாதி. அரசியல் கட்சி ஒன்றின் தலைவன். நான் ஒரு தெரு ஒரக் ‘கச்சாங் பூத்தே'(கடலை) வியாபாரியாக இருந்திருந்தால் வழக்குத் தொடுத்திருக்க மாட்டேன்,” என அந்த வழக்கு விசாரணையின் போது அவர் குறிப்பிட்டார்.
அப்படியென்றால் ‘கச்சாங் பூத்தே’ வியாபாரிகள் இவரைப் பொருத்த வரையில் அவ்வளவு இளக்காரமானவர்களா எனும் கேள்வி எழுகிறது.
கடலை வியாபாரம் இந்நாட்டில் காலங்காலமாக நம் சமூகத்தினரின் பாரம்பரியத் தொழிலாக இருந்து வருகிறது.
பேராக் மாநிலத்தின் புந்தோங் பகுதியில் இதற்கென ஒரு தொழில் பேட்டையே உள்ளது. அங்கிருந்துதான் நாடு முழுவதிற்குமானத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வினியோகம் செய்யப்படுகிறது.
இது மகாதீருக்குத் தெரியுமா அல்லது தெரியாததைப் போல பாசாங்கு செய்கிறாராத் தெரியவில்லை.
அப்படிப்பட்ட ஒரு தொழிலையும் அதன் வியாபாரிகளையும் மகாதீர் இழிவுபடுத்தி பேசியிருக்க வேண்டிய அவசியமே இல்லை.
ஆண்டாண்டு காலமாக நம் சமூகம்தான் இவருக்குக் கிள்ளுகீரை. வாய்க் கூசாமல் நம்மை இழிவுபடுத்திப் பேசுவது இவருக்கு வழக்கமாகிவிட்டது.
ஏற்கெனவே நம் சமூகத்தினரை இவர் ‘கில்லிங்’ என்று விமர்சனம் செய்ததை நாம் இன்னும் மறக்கவில்லை.