பிரதமர்: தேசிய கூட்டணியின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்!

தேசிய கூட்டணியின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதற்கு பாரிசான் வேட்பாளரின் வெற்றியே ஒரு சான்றாகும் என்றுள்ளார் பிரதமர் முகிதீன்.

ஸ்லிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நேற்று பாரிசன் நேஷனல் வேட்பாளர் முகமட் ஜைதி அஜீஸின் வெற்றி, கட்சி மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் தேசிய கூட்டணி அரசாங்கம் செயல்படுத்திய கொள்கைகளையும் நிரூபித்துள்ளது.

பிரதமர் முகிதீன் யாசின் இன்று ஒரு அறிக்கையில், முவாபாக்கட் நேஷனல் கூட்டணியில் உள்ள பெர்சத்து, அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் வாக்காளர்களின் முழு ஆதரவைப் பெற உறுதியான ஒப்பந்தத்தை உருவாக்க முடிந்துள்ளது என்பதையும் இந்த வெற்றி தெளிவாக நிரூபிக்கிறது என்றார்.

“ஜைதி தனது கடமைகளையும் பொறுப்புகளையும் சிறப்பான முறையில் மக்களுக்கு நிறைவேற்றுவார் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

அதோடு, இந்த வெற்றிக்கு உதவிய முகமட் ஜைதி மற்றும் கட்சி இயந்திரங்களையும் முகிதீன் வாழ்த்தி பாராட்டினார்.

இரண்டு சுயேட்சை வேட்பாளர்களான அமீர் குஸ்யாரி முகமட் தனுசி (2,115 வாக்குகள்) மற்றும் சந்தாரா சேகரன் சுப்பிரமணியம் (276 வாக்குகள்) ஆகியோரை தோற்கடித்து 10,945 பெரும்பான்மையுடன் 13,060 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று முகமட் ஜைதி ஸ்லிம் மாநில ஆசனத்தை தக்க வைத்துக் கொண்டார்.