நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகள் மாறுவதைத் தடுக்க, அடுத்த மக்களவை அமர்வின் போது, அதற்கு எதிராக சட்டங்களை இயற்றுவதன் அவசியத்தைப் பரிசீலிக்குமாறு வழக்குரைஞர் மன்றம் மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியது.
வழக்குரைஞர் மன்றத் தலைவர், சலீம் பஷீர், மலேசியா கடுமையான அரசியல் அமைதியின்மையை எதிர்கொண்டுள்ளது, இது சமீபத்தில் மக்களிடையேக் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
“கூட்டாட்சி மட்டத்தில், கட்சி தாவலுக்கு எதிரான சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திற்கு எந்தத் தடையும் இல்லை என்று வழக்குரைஞர் மன்றம் கருதுகிறது,
“மக்கள் வாக்களித்த பின்னர் கட்சியை மாற்றுவது அவர்களுக்கு இழைக்கும் நம்பிக்கை துரோகம் என்று நாங்கள் கருதுகிறோம்.
“நம் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்க, இத்தகைய நெறிமுறையற்ற அரசியல் தவிர்க்கப்பட வேண்டும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனவே, மாநிலச் சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ கட்சி தாவுவது சட்டத்தின் ஆட்சியையும் அரசியலமைப்பின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கத் தவறும் ஒரு சட்டவிரோதச் செயலாக மாற்றப்பட வேண்டும் என்றார் அவர்.
- பெர்னாமா