‘6,800-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பேருந்து உரிமையாளர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்’

நவம்பர் 6-ஆம் தேதி, தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத் திட்டத்தில், தங்களின் மூன்று பரிந்துரைகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று கெமிலாங் மலேசியப் பயண நிறுவனம் & பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (ஜிஏபிபி பஸ் மலேசியா) வலியுறுத்துயுள்ளது.

அதன் தலைவர், அப்துல் அஜீஸ் இஸ்மாயில் கனி, தங்களின் பரிந்துரைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும், ஏனெனில் ஒரு காலத்தில் நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த வருமானத்தை ஈட்டித்தந்த சுற்றுலாத்துறை, தற்போது கோவிட் -19 தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

“எங்கள் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால், சுற்றுலாத் துறை, குறிப்பாக சுற்றுலாப் பேருந்துகளின் உரிமையாளர்கள், கோவிட் -19 தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“எங்கள் முதல் கோரிக்கை என்னவென்றால், கடன் நிறுவனங்களிடமிருக்கும் (Finance Company) எங்கள் கடன்களை, அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் வங்கிகள் எடுத்துகொள்ள வேண்டும்.

“காரணம், நாடு முழுவதும் 6,800-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பேருந்து உரிமையாளர்கள் வருமான பற்றாக்குறையால், மாதாந்திர தவணைகளைச் செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள், பெரும்பாலான கடன் நிறுவனங்கள் கடன் ஒத்துவைப்பு (moratorium) தேர்வுகளை வழங்குவதில்லை,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

இப்போது பேருந்து உரிமையாளர்கள் கடன் நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெற வேண்டியக் கட்டாயத்தில் இருப்பதாக அஜீஸ் மேலும் கூறினார்.

“எங்களுக்குத் தெரிந்தவரை, ஐந்து கடன் நிறுவனங்கள் மட்டுமே அரசாங்கம் வகுத்துள்ள நடைமுறையைப் பின்பற்றுகின்றன. மீதமுள்ளவை, தங்கள் நிறுவனத்தை எஸ்.எஸ்.எம். (மலேசிய நிறுவனங்கள் ஆணையம்) உடன் பதிவு செய்து, வாடகை கொள்முதல் சட்டத்தைப் பயன்படுத்தி கடன்களை வழங்குகின்றன.

“அரசாங்கத்தின் எந்தவொரு தரப்பும் அவர்களைக் கண்காணிப்பதில்லை, இதன் விளைவாக அவர்கள் விரும்பியபடி செயல்படுகிறார்கள். அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது, கடன் ஒத்திவைப்பு இல்லை.

“பணம் செலுத்த முடியாவிட்டால், பேருந்தைத் திருப்பித் தருவதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு. மாறாக, கடனைச் செலுத்தாவிட்டால் எங்கள் சொத்துக்களைக் கையகப்படுத்தும் வகையில், சட்ட நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு.

“எனவே, கடன் நிறுவனங்களிடமிருக்கும் எங்கள் கடன்களை, அரசாங்கத்திற்குச் சொந்தமான வங்கிகள் எடுத்துக்கொள்ள வேண்டுமென நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இதற்குப் பிறகு, வங்கிகளுடனான கடனை நாங்கள் சமாளிப்போம். அது தானாகவே கடன் ஒத்துவைப்பைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பை எங்களுக்கு வழங்குகிறது,” என்று அவர் கூறினார்.

மலேசியா முழுவதும், சுற்றுலா பேருந்து உரிமையாளர்களுக்கு மொத்தம் RM2.5 பில்லியன் முதல் RM3 பில்லியன் வரை கடன் உள்ளது என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், அதன் துணைத் தலைவர் வான் ஷாய்ரி வான் அகமது, சாலை வரி மற்றும் பேருந்து அனுமதிகளில் நெகிழ்வுத்தன்மையை வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

“எங்கள் இரண்டாவது கோரிக்கை, சுற்றுலாத்துறை மீண்டும் பழைய நிலைக்கு வரும் வரை, சாலை வரி மற்றும் பேருந்து அனுமதிகளை இரண்டு ஆண்டுகளுக்கு இரத்து செய்ய வேண்டும்.

“நாங்கள் அரசாங்கத்திற்கு அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்.டி.ஐ) கொண்டு வருபவர்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தத் தொற்றுநோய் பாதிப்பின்போது அரசாங்கத்திடமிருந்து எந்த நன்மையும் நாங்கள் பெறவில்லை.

சுற்றுலாப் பேருந்துகளுக்கான காப்பீட்டுத் தொகையில், இரண்டு ஆண்டுகளுக்கு 50 விழுக்காடு தள்ளுபடி வழங்க வேண்டும் என்றும் ஜிஏபிபி பஸ் மலேசியா விரும்புகிறது என்றும் வான் ஷாய்ரி கூறினார்.

“ஏனென்றால், அதிகக் காப்பீட்டுத் தொகை சுற்றுலாப் பேருந்துகளுக்கு வசூலிக்கப்படுகிறது. முதல் வருடத்தில் காப்பீட்டுக்காக நாங்கள் குறைந்தபட்சம் RM20,000 செலுத்த வேண்டும்.

“பள்ளிப் பேருந்துகள் RM1,200 மட்டும் செலுத்தினால் போதும். ஆனால், அதிக ஆபத்து நிறைந்த வணிகம் என்ற பெயரில், எங்களிடம் RM6,000 முதல் RM7,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. என்.சி.பி. 25 விழுக்காடு வரை மட்டுமே உள்ளது, முடிந்தால் மற்ற பொது வாகனங்களைப் போல எங்களுக்கும் 55 விழுக்காடு வேண்டும்.”

இதற்கிடையில், 2021 வரவுசெலவுத் திட்டத்தில் சுற்றுலாப் பேருந்து உரிமையாளர்களுக்கு அரசாங்கம் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்க வேண்டும் என்று ஜிஏபிபி பஸ் மலேசியா செயலாளர் குணரத்தினம் தெரிவித்தார்.

“மலேசியா முழுவதிலும் இருக்கும் 6,800-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் நாங்கள், எங்கள் வாழ்வாதாரத்தைத் தொடர, அரசாங்கம் RM50 மில்லியன் ஒதுக்கீடு வழங்கி உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

“மற்றவர்களைப் போல், இந்தக் காலகட்டத்தில் எங்களால் மற்ற துறைகளைத் தேர்வு செய்ய முடியாது. ஏனென்றால், எங்களிடம் பேருந்துகள் உள்ளன, அதை அப்படியே விற்க முடியாது.

“இந்த நேரத்தில் யார் பேருந்துகளை வாங்க விரும்புவார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் பேருந்துகளின் பராமரிப்புக்காக நாங்கள் இன்னும் செலவழிக்க வேண்டியுள்ளது. இதில் நிறுத்துமிடக் கட்டணம் மற்றும் இன்னும் பல உள்ளன.”

“எனவே, இந்தப் பட்ஜெட்டில் போக்குவரத்து அமைச்சின் மூலம் RM50 மில்லியன் சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டுமென நாங்கள் அரசாங்கத்தைக் கேட்கிறோம்,” என்று அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, தற்போது அவர்களின் வணிக விவகாரங்களுக்குத் தீர்வுகாண, பல அமைச்சுகளைத் தொடர்புகொள்ள வேண்டியுள்ளது என்றும், அது அவர்களுக்குக் குழப்பத்தையே அதிகம் ஏற்படுத்துகின்றது என்றும் கூறியுள்ளனர்.

ஆகவே, அவர்களது வணிக வேலைகளை ஒரே அமைச்சை அணுகி, எளிதாக முடிக்கும் வகையில் அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.