இராகவன் கருப்பையா – சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அரசாங்க நூலகங்களுக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான தமிழ் புத்தகங்களைக் கொண்டு சேர்க்கும் பணியினை மேற்கொண்டு வரும் ஒரு அரசு சாரா இயக்கம் இவ்வாண்டும் மொத்தம் 1,320 புத்தகங்களை அனுப்பியுள்ளது.
ஏறத்தாழ 40 உள்நாட்டு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளான அவை, மாநிலம் தழுவிய நிலையில் உள்ள 33 நூல் நிலையங்களில் இடம் பெறும்.
கடந்த 13 ஆண்டுகளாக இந்த உன்னதப் பணியினை மேற்கொண்டு வரும் ‘சுப்பர் மைண்ட் டைனமிக்’ எனும் அந்த தன்முனைப்பு இயக்கம் இது வரையில் ஆயிரக்கணக்கான உள்நாட்டு நூல்களை அங்கு அனுப்பியுள்ளது.
இவ்வாண்டோடு, நாடு தழுவிய நிலையில் உள்ள 200கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை சிலாங்கூரில் உள்ள நூலகங்களில் இடம்பெற அவ்வியக்கம் வகை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர், கிளேங்கில் அமைந்துள்ள தாமான் செந்தோசா தமிழ் பள்ளியில் கடந்த வாரம் நடைபெற்ற காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் அதன் ஒருங்கிணைப்பாளர் மு.கணேசன் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
நாடறிந்த பிரபல தன்முனைப்புப் பேச்சாளருமான கணேசன் இவ்வாண்டின் படைப்பாளர்களுக்கு சிலாங்கூர் அரசின் சார்பாக அந்தக் காசோலைகள வழங்கினார்.
வெறும் காசோலை வழங்கும் நிகழ்ச்சி என்றில்லாமல், அப்பள்ளியின் தலைமையாசிரியர் தமிழரசுவின் துணையோடு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஒன்றையும் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றுமின்றி புத்தகங்களையும் சான்றிதழ்களையும் ‘சுப்பர் மைண்ட் டைனமிக்’ வழங்கியது.
உள்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளை மாணவர்கள் உள்பட அதிகமானோர் படிக்க வேண்டும் எனும் உன்னத நோக்கத்தில் தமது இயக்கம் பயணிக்கிறது என கணேசன் தமதுரையில் குறிப்பிட்டார்.
“வாசிக்கும் சமுதாயம் சிந்திக்கும், தலை நிமிரும், மிகச் சிறப்பாகச் செயல்படும்,” என்பதே தமது இயக்கத்தின் எதிர்பார்ப்பு மட்டுமின்றி கொள்கையும் கூட, என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உள்பட 80கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.