அமைதிப் பேரணி மசோதா, தெரு ஆர்ப்பாட்டங்கள் உள்பட பொதுமக்கள் அமைதியாக ஒன்றுகூடுவதை மட்டும் கட்டுப்படுத்தவில்லை, பேரணி பற்றி ஊடகங்கள் செய்தி சேகரிப்பதையும் நிபந்தனைகளுடன்தான் அனுமதிக்கிறது என்று ஐநா மனித உரிமை அமைப்பு, கண்டித்துள்ளது.
அம்மசோதவாவை வரைவதில் மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாமுடன் ஆலோசனை கலக்கப்படாதது குறித்து ஐநா சிறப்பு அலுவலர் மையினா கியாய் “வருத்தம்” தெரிவித்தார்.
மசோதா பேரணி பற்றித் தெளிவான விளக்கத்தைத் தரவில்லை; விரிவான கட்டுபாடுகளையும் நிபந்தனைகளையும்தான் விதிக்கிறது என்று கூறிய அவர் அது அமலாக்க அதிகாரிகளுக்கும் உள்துறை அமைச்சருக்கும் “அளவுக்கு அதிகமான அதிகாரத்தை” அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
“பன்னாட்டுச் சட்டப்படி இந்தக் கட்டுப்பாடுகளில் பல நியாயமற்றவை”, என்று அமைதிப் பேரணிகளுக்கும் ஒன்றுகூடலுக்குமான உரிமைகள் மீதான ஐநா சிறப்பு அலுவலரான மையினா கூறினார்.
அமைதிப் பேரணி மசோதா நவம்பர் 21-இல் முதல் வாசிப்புக்குக் கொண்டுவரப்பட்டு பின்னர் சில திருத்தங்களுடன் நவம்பர் 29-இல் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டது.
அதற்கெதிராக மாற்றரசுக் கட்சி எம்பிகள் மக்களவையைவிட்டு வெளிநடப்புச் செய்தனர். அதே நாளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குரைஞர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் சென்றனர்.
இன்னொரு ஐநா சிறப்பு அலுவலர், மார்கரட் செகாக்யா (இடம்) 21-வயதுக்குக் குறைவானவர்கள் பேரணியில் கலந்துகொள்வதற்கு மசோதா தடை விதிப்பது குறித்து வியப்புத் தெரிவித்தார்.
“அரசியல், சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வது சிறுவர்களுக்கும் மாணவர்களுக்கும் இளைஞர்களும் ஒரு விழிப்புணர்வை ஊட்டும்”, என்றாரவர்.
புலம் பெயர்ந்தோர் உரிமைகளைக் கண்காணிக்கும் ஐநா சிறப்பு அலுவலரான பிரான்கோய்ஸ் கிரிபாவ், மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“ஒன்றுகூடும் உரிமை அனைவருக்கும் உண்டு”, என்றாரவர்.
சம்பளம் ஏதுமின்றி சுயேச்சையாக செயல்படும் இந்த அதிகாரிகள் அனைவருமே ஜினிவாவில் உள்ள ஐநா மனித உரிமை மன்றத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த ஜூலையில், ஐநா மனித உரிமை உயர் ஆணையர் அலுவலகம், ஜூலை 9 பெர்சே 2.0 பேரணியின்போது ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவதில் அளவுமீறிய முரட்டுத்தனம் காட்டப்பட்டதாகக் குறைகூறியது.