நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கோலாலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் கூறுகிறார்.
நாடும் மக்களும் கடுமையான நோய் தொற்று மற்றும் பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் பிரதமர் மொகிதீன் யாசினின் அரசாங்கம், , சமர்ப்பித்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இல்லை என்கிறார்.
மேலும் விவரிக்கையில், “பி.என் அரசாங்கத்தின் 2021 ம் ஆண்டுக்கான பட்ஜெட், கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கும், நடமாட்டக் கட்டுப்பாடு விதிகளில் வெகுவாகப் பாதித்துள்ள துறைகளுக்கு, குறிப்பாகச் சுகாதாரத்துறைக்கும், வேலை இழந்தவர்கள் மற்றும் வாழ்வில் மிகவும் பின் தங்கிய மக்களின் நல்வாழ்வுக்கும் போதுமான ஒதுக்கீடுகளை 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வழங்க வில்லை.” என்கிறார் சேவியர்.
“அதே வேளையில் நாட்டு மக்களிடையே வேற்றுமையைத் தூண்டும் இயக்கங்களுக்கும், சில அமைச்சர்களின் கைப்பாவையாகச் செயல்படும் ஜாசா போன்ற அமைப்புகளுக்கும் ரிம 85.5 மில்லியன் ஒதுக்கீடுகளைச் செய்துள்ள நிதி அமைச்சர் ஏழைகளின் அத்தியாவசியத் தேவைகளைக் கூட உதாசீனப் படுத்தியுள்ளதும் கண்டிக்கப்பட வேண்டியது.” எனச் சாடுகிறார். மேலும்,
தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்தும் வண்ணமாகக் கடந்த 2015 ம் ஆண்டு தொடங்கிப் பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக் காலத்தில் அப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ஒதுக்கிய நிதியும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் 1996 ம் ஆண்டு கல்வி சட்டக்கூறுகள், நான்கு முதல் ஆறு வயதுக்கு உட்பட்ட மாணவர்களைப் பாலர்பள்ளிகளுக்கு அனுப்ப வகை செய்திருந்தும். இன்றுவரை 55 விழுக்காட்டுக்கு அதிகமாகத் தமிழ்ப்பள்ளிகள் பாலர் பள்ளிகளின்றிச் செயல்படுகின்றன. அதிலும் பல முறையான கட்டடங்களுக்கும், போதிய மாணவர்களுக்கு இடமளிக்காமலும் இருப்பதாதாகத் தெரிகிறது.
அடிப்படையில், மேம்பாடு என்ற வகையில் நாட்டின் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏழ்மையில் வாழ்கின்ற மக்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்குப் பயனளிக்கும் வழிமுறைகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.
நமது நிதி அமைச்சர் சொல்கிறார் அடுத்த வருடம் நமது நாட்டின் வளர்ச்சி 6.5 முதல் 7.5 சதவீதத்திற்கு உயரம் என்கிறார். அதே வேளையில் நம்முடைய வேலை வாய்ப்புகளில் அளவு கூடும் என்கிறார் வேலை இல்லாதவர்களின் அளவு 3.3 சதவீதத்திலிருந்து 4.2 சதவீதம் அளவு தான் இருக்கும் என்றும் அதோடு ஒட்டு மொத்த உள்நாட்டு வருமானம் என்பது 6.9 சதவீதம் 2011 21 கூடும் என்கிறார் இது நடக்கக் கூடிய காரியமாக இல்லை என்பதுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.
அதோடு நிதி அமைச்சரின் கருத்துப்படி அடுத்த ஆண்டுக்கான வருமான வரியில் அதிக வருமானம் கிடைக்கும் என்கிறார். இதன் அடிப்படை என்னவென்றால் வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் அதிகமானோர் வேலை செய்வார்கள் வேலை இல்லாத் திண்டாட்டம் குறையும் அப்படி இருக்கும் தறுவாயில் செலவு செய்வதற்கான பணம் அதிகம் இருக்கும். நமது நிதி நிர்வாகம் உயர்வாக இருக்கும் என்கிறார். இது நடப்புக்கு ஒவ்வாத வாதமாக உள்ளதைச் சாதாரண மக்களும் உணர்வர்.
தற்பொழுது நாம் அனைவருமே ஒரு இக்கட்டான சூழலில் இருக்கின்றோம் வருமானம் குறைவாக இருக்கின்றது வியாபாரமும் குறைவாக இருக்கின்றது வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கின்றது. இது போன்ற சூழலில் நமக்கு எப்படி அதிகமான வருமானம் கிடைக்கும் என்பதும் இதிலிருந்து நாம் கட்டும் வரி பணத்திலிருந்து அரசாங்கம் எப்படிப் பணத்தைப் பெற்று நாட்டின் நிர்வாகத்தையும், நாட்டின் நிதி நிர்வாகத்தையும் செயல்படுத்தும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தப் பட்ஜெட்டை எந்தக் கோணத்தில் வைத்து ஏற்றுக்கொள்வது. அப்படி ஏற்றுக்கொண்டால் அது சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளைப் புறக்கணிப்பதாகவே பொருள்படும் என்கிறார் மக்கள் நீதி கட்சியின் உதவித் தலைவருமான சேவியர் ஜெயகுமார்.