2019 சுஹாகாம் ஆண்டு அறிக்கை, இவ்வாண்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை என்று மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.
ஓராங் அஸ்லி, பெண்கள் மற்றும் குழந்தைகள், மனிதக் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்கள், அகதிகள், புகலிடம் கோருவோர் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகள் தொடர்பான ஆணையத்தின் பரிந்துரைகளை, அந்த ஆண்டு அறிக்கையில் உள்ளடக்கியதாக சுஹாகாம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“மலேசிய மனித உரிமைகள் ஆணையச் சட்டம் 1999-ன் பிரிவு 21, ஆண்டு அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்று சுஹாகாம் குறிப்பிட்டுள்ளது.
“இருப்பினும், இந்த அறிக்கை விவாதிக்கப்படுவது முக்கியம் என்று ஆணைக்குழு கருதுகிறது, ஏனெனில் இது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவும் பொருத்தமான தீர்வுகளைப் பரிந்துரைக்கவும் வாய்ப்பளிக்கும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கருத்து தெரிவித்த சுஹாகாம், அரசாங்க விவகாரங்களின் ஒரு பகுதியாக, குறிப்பாக நாடாளுமன்ற விவாதங்களில், மனித உரிமைகள் பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
சுஹாகாம் ஆண்டு அறிக்கை, முதன்முதலில் 2019 டிசம்பர் 5-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதால், இந்த நடைமுறை இந்த ஆண்டிலும் எதிர்காலத்திலும் தொடரும் என்று ஆணையம் நம்புகிறது.
முன்னதாக, 2019 சுஹாகாம் ஆண்டு அறிக்கை நவம்பர் 4-ம் தேதி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது, அதில் அழுத்தமான, அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கை தேவைபடும் பல்வேறு மனித உரிமை பிரச்சினைகள் எடுத்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பெர்னாமா