கோவிட் 19 : இன்று 851 புதியத் தொற்றுகள், ஜொகூரில் அதிகரித்துவரும் பாதிப்புகள்

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 851 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதில் 102 பாதிப்புகள் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவை எனச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜொகூரில், முதல் முறையாக இன்று மூன்று இலக்கங்களில் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக நம்பப்படுகிறது. 64 பாதிப்புகள் ஏற்கனவே உள்ள திரளைகளுடன் தொடர்புடையவை, 23 பாதிப்புகள் புதியத் திரளையைச் சேர்ந்தவை.

அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் கொண்ட இடங்களாக, கிள்ளான் பள்ளத்தாக்கு (39.2 %), சபா (26.9 %) மற்றும் ஜொகூர் (12 %) ஆகியவை உள்ளன.

இன்று, சபாவில் 2 மரணங்கள் நேர்ந்துள்ளன. ஆக, நாட்டில் இதுவரை கோவிட் -19 காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 365-ஆக உயர்ந்துள்ளது.

658 நோயாளிகள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அவசரப் பிரிவில் 122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 47 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

திரெங்கானு, புத்ராஜெயா, சரவாக், லாபுவான் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இன்று 3 மாநிலங்களில், சிலாங்கூர் 249, சபா 229 மற்றும் ஜொகூர் 102 என மூன்று இலக்கங்களில் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

சிலாங்கூர், சபா மற்றும் ஜொகூரை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

கோலாலம்பூரில் 85, நெகிரி செம்பிலானில் 62, பினாங்கில் 60, பேராக்கில் 34, கெடாவில் 26, கிளந்தானில் 2, பஹாங் மற்றும் மலாக்காவில் 1.

மேலும் இன்று, புதிதாக 5 திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

இம்பியான் திரளை – சிலாங்கூர், கோம்பாக் மாவட்டம்; டேச பினாங் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய், கெப்போங், செராஸ் & தித்திவங்சா மாவட்டங்கள்; ஜெர்னாய் திரளை – கோலாலம்பூர், தித்திவங்சா மாவட்டம்; ஶ்ரீ வங்சா திரளை – கோலாலம்பூர், தித்திவங்சா மாவட்டம்; பாலோய் திரளை – ஜொகூர், பொந்தியான் & ஜொகூர் பாரு மாவட்டங்கள்.