‘இன்னும் தீர்க்கப்படவில்லை’, மொத்த விற்பனையாளர்கள் அன்னுவார் மூசாவிடம் கூறியுள்ளனர்

கோலாலம்பூர் ‘மொத்தச் சந்தை’யில் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பை நிறுத்தப் போவதாக அமைச்சர் ‘இறுதி’ தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும், இதனால் சில தரப்பினர் எதிர்கொள்ளவுள்ள சில சிக்கல்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

கோலாலம்பூர் காய்கறி மொத்த விற்பனையாளர்கள் சங்கம், அடுத்த ஆண்டு வரை பணி அனுமதி பெற்ற வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, அனுமதி காலாவதியாகும் வரை விலக்கு அளிக்கப்படுமா என்றக் கேள்வியை எழுப்பியுள்ளது.

அதன் தலைவர் வோங் கெங் ஃபாட், இதனால் முதலாளிகளுக்கு ஆகவுள்ள செலவுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

“உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான செலவு ஒரு நாளைக்கு RM80 முதல் RM100 வரை, அதாவது ஒரு மாதத்திற்கு RM3,000 ஆகும்; அதேவேளை, வெளிநாட்டு தொழிலாளர்களுக்குத் தினசரி ஊதியத்தை ஒரு நாளைக்கு RM50 முதல் RM60-க்குள் முடித்துவிடலாம்,” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், கூட்டரசுப் பிரதேச அமைச்சின் அறிவுறுத்தல்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை, ஏனெனில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் வேலை கேட்டு பல உள்ளூர்வாசிகள் அங்கு வருவதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூர் மொத்த சந்தையில் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் மொத்த விற்பனையாளர்களிடமிருந்து, எந்தவொரு முறையீட்டையும் பெறப்போவதில்லை என்று நேற்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்வார் மூசா தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு தொடங்கி, உள்ளூர் மக்கள் மட்டுமே மொத்தச் சந்தையில் வேலை செய்ய முடியும் என்று அவர் கூறினார்,

அக்டோபர் 23-ம் தேதி, கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்.), முதலாளிகளுக்கு உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துமாறு நோட்டீஸ் அனுப்பியதுடன், அவர்கள் இணங்கத் தவறினால் அவர்களின் வணிக உரிமத்தை பறிக்கவுள்ளதாக எச்சரித்தது.

இருப்பினும், அந்த இரண்டு பத்தி அறிவிப்பில், தற்போதுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலைகுறித்து சொல்லப்படவில்லை.

2021, ஜனவரி 1 முதல், வெளிநாட்டினர் மொத்த சந்தையில் வேலை செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும்; அதனால், மொத்த விற்பனையாளர்கள் தங்கள் வெளிநாட்டு தொழிலாளர் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்க தேவையில்லை என்றும் ஒரு டிபிகேஎல் அதிகாரி இன்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்..

இப்போதைக்கு, சட்ட அனுமதி பெற்ற 16 வெளிநாட்டு தொழிலாளர்கள் மட்டுமே அங்குப் பணியாற்றி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

“அவர்கள் டிசம்பர் 31, 2020 வரை மட்டுமே பணிபுரிய, டிபிகேஎல் அனுமதி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

‘ஈரமான, அழுகிய, கனமான மற்றும் ஆபத்தான’

இதற்கிடையில், கோலாலம்பூர் ஹோய் சியோங் மீன் மொத்த விற்பனையாளர்கள் சங்கம், கோவிட் -19 தொற்றுநோய் முடிந்தபின் உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறியது.

அதன் தலைவர் சிங் கியான் ஹாக், ஈரச் சந்தை வேலைகளை, “4பி – ஈரமான, அழுகிய, கனமான மற்றும் ஆபத்தான (4B – Basah, Busuk, Berat dan Bahaya) வேலைகள் என்று விவரித்தார்.

“அவர்கள் (மொத்த விற்பனையாளர்கள்) கேட்பது என்னவென்றால், அவர்களுடன் முன்பு பணிபுரிந்த வெளிநாட்டினரைத் தொடர்ந்து பணியமர்த்த, வேலை அனுமதிகளை மீண்டும் புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும்.

“அவர்களுடன் பணிபுரியும் சட்டபூர்வமான வெளிநாட்டு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தால், அவர்கள் புதியத் தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்,” என்று அவர் கூறினார், இது மொத்த விற்பனையாளர்களுக்கு நியாயமற்றது என்று கூறினார்.

உள்ளூர் தொழிலாளர்களில் சுமார் 60 % முதல் 70 % பேர் இதற்குப் பிறகு மற்ற துறைகளுக்கு வேலை மாற்றலாகலாம் என்று அவர் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், மலேசியக் காய்கறி மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சோங் தெக் கியோங், நிரந்தர வசிப்பிட அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு அங்குப் பணிபுரிய நெகிழ்வுத்தன்மையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று எதிர்பார்பப்தாகக் கூறினார்.

“பல மலேசியர்கள் வேலையில்லாமல் இருப்பதால் (உள்ளூர் மக்களுக்கு) உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். மொத்தச் சந்தையில் அவர்களுக்கு வேலை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

“ஆனால் நாங்கள் ஒரு சிக்கலை எதிர்கொள்கிறோம், உள்ளூர் மக்கள் ஓரிரண்டு மாதங்கள் மட்டுமே வேலை செய்வர், பிறகு அவர்கள் வேலையை விடக்கூடும்,” என்று அவர் கூறினார்.