‘பேராக் நடவடிக்கை’ – எதிர்க்கட்சித் தொகுதிகளில் உள்ளவர்களும் பயனடையலாம்

பேராக் மக்கள், குறிப்பாக எதிர்க்கட்சி தொகுதியில் இருக்கும் மக்கள், அஹ்மத் ஃபைசல் அஸுமுவை மந்திரி பெசார் பதவியிலிருந்து ஒதுக்கி வைத்த அம்னோவின் முயற்சிகளை ஆதரித்த மாநிலப் பக்காத்தான் ஹராப்பானின் நடவடிக்கைகளினால் பலனடைவார்கள் என்று டிஏபி இளைஞர் தலைவர் ஹோவர்ட் லீ தெரிவித்தார்.

பேராக் பி.எச்., அம்னோவால் கையாளப்படுகிறது என நினைத்து, பலர் தங்கள் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தியிருப்பதை அறிந்துள்ளதாகவும் லீ கூறினார்.

“வெளியில் இருந்து பார்க்கும்பொழுது, பி.எச். தோற்றுவிட்டதுபோல் தோற்றம் தருகிறது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், உண்மையில் வென்றவர்கள், குறிப்பாக எதிர்க்கட்சி தொகுதிகளில் வசிப்பவர்கள் என்பதால் நாங்கள் அமைதி அடைந்தோம்,” என்று அவர் இன்று ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

பேராக் வரலாற்றில் முதல்முறையாக, அனைத்து மாநிலத் தொகுதிகளும் அரசு அல்லது எதிர்க்கட்சி ஆதரவாளர்களைப் பொருட்படுத்தாமல் நியாயமான மற்றும் சமமான ஒதுக்கீடுகளைப் பெற்றன என்று லீ கூறினார்.

“இந்த ஒதுக்கீடு அந்தந்தத் தொகுதி மக்களுக்கு, மக்கள் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பைகளுக்கு அது போகாது,” என்று அவர் கூறினார்.

அனைத்து கட்சிகளைச் சேர்ந்த 59 பேராக் சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட நடவடிக்கைக் குழுவில் அமர்வார்கள், இது மிக உயர்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு குழுவாக அமைவதோடு, உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்கும் அதிகாரம் கொண்டதாக விளங்கும்.

இது தவிர, மாநில எதிர்க்கட்சித் தலைவரின் நிலையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதோடு, மாநிலக் கணக்குக் குழுவின் தலைவரை எதிர்க்கட்சியிலிருந்து நியமிக்க உதவும் நோக்கில், மாநிலச் சட்டமன்றத்தின் நிரந்தர உத்தரவைத் திருத்துவதற்கும் மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

“பேராக் மக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் மக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் தீர்க்கவும் மிகவும் திறமையாக செயல்படுவதை இனி காண்பார்கள்.

பி.எச். ஆதரவாளர்களைக் கவலைப்பட வேண்டாம் என்று அந்தப் பாசீர் பிஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார். பி.எச். தலைவர்கள் கொள்கை, நேர்மை மற்றும் நம்பிக்கையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.