சிங்கப்பூருடனான் எச்.எஸ்.ஆர். ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது, மலேசியா இழப்பீடு செலுத்த வேண்டும்

மலேசியாவுடனான கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக இரயில் திட்டம் (எச்.எஸ்.ஆர்.) தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதை சிங்கப்பூர் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

மலேசியா இரயில் பாதையில் மாற்றங்களைச் செய்ய விரும்புவதாகவும், இது இரு நாடுகளின் அரசாங்கங்களிடையே விவாதிக்கப்பட்டதாகவும், இறுதியில் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முடிவுக்கு அது வழிவகுத்ததாகவும் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு கூறியது.

சிங்கப்பூர் பிரதமர், லீ சியான் லூங் மற்றும் மலேசியப் பிரதமர் முஹைதீன் யாசின் ஆகியோர் வீடியோ மாநாடு மூலம், 2020 டிசம்பர் 2 அன்று சந்தித்தனர், இந்தத் திட்டத்தில் மலேசியா முன்மொழிந்த மாற்றங்கள் உட்பட, எச்.எஸ்.ஆர். திட்டத்தின் நிலையை மறுஆய்வு செய்தனர்.

“மலேசியா எச்.எஸ்.ஆர். இருதரப்பு ஒப்பந்தத்தை நிறுத்த அனுமதித்ததுடன், இருதரப்பு உடன்படிக்கைக்கு இணங்க, எச்.எஸ்.ஆர். ஒப்பந்தத்தின் கீழ், தனது கடமைகளை நிறைவேற்றுவதில் சிங்கப்பூருக்கு ஏற்படும் செலவுகளை மலேசியா ஈடுசெய்ய வேண்டும்,” என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியா எவ்வளவு இழப்பீடு வழங்கும் என்பதை சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு வெளியிடவில்லை.

இந்த முடிவினால், மலேசியாவிற்கு RM300 மில்லியன் செலவாகும் என்று எட்ஜ் மார்கெட்ஸ் முன்பு தெரிவித்திருந்தது.

மலேசியப் பொருளாதாரத்தின் நிலை காரணமாக மாற்றங்கள்

மலேசியப் பொருளாதார நிலைமையின் அடிப்படையில், புத்ராஜெயா முன்மொழிந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாக இரு பிரதமர்களும் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு மலேசியாவின் நிதி தட்டுப்பாடு தொடக்கக் கணிப்பான 3.2 விழுக்காடில் இருந்து, 6 விழுக்காடாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“கோவிட் -19 தொற்றின் காரணமாக மலேசியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கத்தை மதிப்பிட்டு, மலேசிய அரசாங்கம் எச்.எஸ்.ஆர். திட்டத்தில் பல மாற்றங்களை முன்வைத்துள்ளது.

“இரு அரசாங்கங்களும் இந்த மாற்றங்கள் குறித்து பல விவாதங்களை நடத்தியுள்ளன, ஆனால் ஓர் உடன்பாட்டை எட்ட முடியவில்லை.

“எனவே, எச்.எஸ்.ஆர். ஒப்பந்தம் 31 டிசம்பர் 2020 அன்று காலாவதியாகிறது,” என்று அவர்கள் கூறினர்.

இரு நாடுகளும் அந்தந்தப் பொறுப்புகளுக்குக் கட்டுப்படுவதாகவும், ஒப்பந்தம் முடிவடைந்ததன் விளைவாக “தகுந்த நடவடிக்கை” எடுக்கும் என்றும் இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

இருப்பினும், சம்பந்தப்பட்ட இழப்பீட்டுத் தொகையை அவர்கள் குறிப்பிடவில்லை.

இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல இருதரப்பு உறவைப் பேணுவதில் உறுதியாக இருப்பதாக முஹைதீன் மற்றும் லீ இருவரும் கூறினர்.

கே.எல்.-சிங்கப்பூர் எச்.எஸ்.ஆர். இருதரப்பு ஒப்பந்தம் 2016-ல் கையெழுத்தானது, ஆனால் கட்டுமானம் செப்டம்பர் 2018 வரை தாமதப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு, RM100 பில்லியன் வரை செலவாகும் என்று பி.எச். அரசாங்கம் முன்பு மதிப்பிட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன், ஒப்பந்தம் காலாவதியானதைத் தொடர்ந்து மலேசியா சில நீட்டிப்புகளைக் கோரியுள்ளது.

எச்.எஸ்.ஆர்.-ஐ கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்க வேண்டும் என்று புத்ராஜெயா விரும்பியதாகக் கூறப்படுகிறது, ஆனால் அம்மாற்றம் சிங்கப்பூரால் நிராகரிக்கப்பட்டது.

அசல் திட்டத்தின் கீழ், மலேசியாவில் செப்பாங்-புத்ராஜயா, சிரம்பான், ஆயேர் குரோ, மூவார், பத்து பஹாட் மற்றும் இஸ்கண்டார் புத்ரி மற்றும் சிங்கப்பூரில் ஜுரோங் ஈஸ்ட் ஆகிய இடங்களில் எச்.எஸ்.ஆர். நிறுத்தங்களை வைத்திருக்க வேண்டும்.