இராகவன் கருப்பையா – புத்தாண்டு பிறந்துள்ள இவ்வேளையில் தமிழ் மொழி ஆர்வளர்களின் கவனம் முழுவதும் மீண்டும் ஒரு முறை தமிழ் பள்ளிகள் மீதும் இந்திய மாணவர்கள் மீதும் திரும்புவது தவிர்க்க முடியாது ஒன்றுதான்.
இவ்வாண்டின் புதிய பள்ளித் தவணை எதிர்வரும் ஃபெப்ரவரி மாதம் 17ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. வழக்கம் போல இவ்வாண்டும் எத்தனை மாணவச் செல்வங்களை நாம் சீனப் பள்ளிகளிடம் இழக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.
அண்மைய காலமாக தேசிய பள்ளிகளில் பலதரப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் நம் பிள்ளைகளுக்கு ‘தமிழ் பள்ளியே நம் தேர்வு’ எனும் பிரச்சாரத்தின் வழி சிறந்ததொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க பல்வேறுத் தரப்பினர் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் நம் பிள்ளைகள் தமிழ் பள்ளிகளைத் தாண்டி சீனப் பள்ளிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளது நமது சிந்தனையை தூண்டவேண்டும்.
தங்களுடைய பிள்ளைகளை எந்தப் பள்ளிக்கு அனுப்புவது என்பது பெற்றோரின் தனிப்பட்ட விருப்பம்.ஆனால் நம் பிள்ளைகளை சீனப்பள்ளிகள் அன்போடும் ஆவலோடும் அரவணைத்து வரவேற்கின்றன என்று நினைப்பதுதான் தவறு. அப்படியொன்றும் கிடையாது என்பதுதான் உண்மை.
“உங்கள் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளால் எங்கள் பள்ளிகளின் அடைவு நிலை பாதிக்கப்படுகிறது,” என சீன சமூகத்தைச் சார்ந்த கல்விமான்கள் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். இது நமக்கு வேதனையளிக்கும் ஒரு விஷயமாகும்.
கல்வி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சீன சமூகத்தினர் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையைக் கொண்டிருக்கமாட்டார்கள் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.
இந்திய மாணவர்களின் சேர்க்கையால் தங்களுடைய பள்ளிகளின் தரம் கனிசமான அளவு குறைந்துள்ளது என சீனப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் குழு ஒன்று தம்மிடம் தெரிவித்ததாக பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் அண்மையில் கூறினார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நம் மாணவச் செல்வங்களை அவர்கள் வேண்டா வெறுப்பாகத்தான் ஏற்றுக் கொள்கின்றனர்.சீன மொழியைக் கற்றுக் கொள்வது அவசியம்தான். எதிர்காலத்தில் நமக்கு அது நன்மையளிக்கக் கடிய ஒரு விஷயம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
அதற்கென சீனப்பள்ளிக்குத்தான் நம் பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என பிடிவாதம் பிடிக்கக் கூடாது. அதற்கான அவசியமும் இல்லை. பள்ளிக்கூட நேரம் தவிர்த்து மற்ற வேளைகளில் அவர்களை பகுதி நேர சீன மொழி வகுப்புகளுக்கு அனுப்பலாம். இதனைத்தான் தற்போது நிறைய பெற்றோர்கள் செய்யத் தொடங்கிவிட்டனர்.
நம் நாட்டிலுள்ள தமிழ் பள்ளிகள் அண்மைய காலமாக சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்கின்றன என்பது மகிழ்ச்சியான விஷயம். பல்கலைக்கழகம் செல்லும் இந்திய மாணவர்களில் தமிழ் பள்ளி மாணவர்கள்தான் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இனத்துவேசம் மற்றும் பகடிவதை போன்ற சம்பவங்களும் தமிழ் பள்ளிகளில் இல்லை என்பதை நம் சமூகத்தைச் சார்ந்த பெற்றோர்கள் உணர வேண்டும்.
எனவே தமிழ் பள்ளிகள் மட்டுமே இப்படிப்பட்ட குழலை நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனும் யதார்த்தத்தை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு பெற்றோர்கள் செயல்படுவது அவசியமாகும்.
தற்போது பாலர்பள்ளி கல்வி அனைத்து குழந்தைகளும் பெரும் அளவுக்கு சூழ்நிலைகள் உள்ளன. அதோடு தமிழ்ப்பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் மற்றும் அதன் தரம் உயர்த்தப்பட்டால் தமிழ்ப்பள்ளிகளின் தரம் மேலும் உயரும்.