10 கி.மீ. சுற்றளவு நிலை இரத்து, மாநில-மாவட்டக் கட்டுப்பாடுகள் நிலைநிறுத்தப்பட்டன

10 கிலோமீட்டர் சுற்றளவில் மட்டும் பயணம் என்றக் கட்டுப்பாட்டை, அரசாங்கம் இன்று முதல் இரத்து செய்கிறது.

“ஆக, ஒரே மாவட்டத்தில் இயங்க மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்,” என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

எவ்வாறாயினும், நாடு முழுவதும், மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான எல்லை தாண்டியப் பயணங்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்று இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இஸ்மாயில் கூறினார்.

மீட்புநிலை பிகேபி-இன் கீழ் வைக்கப்பட்டுள்ள பெர்லிஸில் மட்டும் மாவட்டங்களுக்கிடையில் பயண அனுமதி உண்டு.

சிலாங்கூர், கோலாலம்பூர், ஜொகூர் மற்றும் பினாங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) இந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மார்ச் 4 வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி கூறுகையில், பி.கே.பி. அமல்படுத்தப்பட்ட பிற மாநிலங்களில், நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி.யும், பெர்லிஸில் மீட்புநிலை பி.கே.பி.யும் அமலுக்கு வரும் என்றார்.

தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு அமர்வில், சுகாதார அமைச்சு இடர் மதிப்பீட்டை முன்வைத்த பின்னர், பி.கே.பி. நிலையில் மாற்றங்கள் முடிவு செய்யப்பட்டன என்றார் அவர்.