மலேசியாகினி வழக்கு சர்வதேச செய்தி நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்தது

வாசகர்கள் வெளியிட்டக் கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, மலேசியாகினி இணைய செய்தித்தளத்தைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த ஃபெடரல் நீதிமன்றத்தின் முடிவு சர்வதேச செய்தி நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்தது.

பிபிசி-இல் வெளியான, ‘மலேசிய ஊடகத் தளத்தை மாற்றிய ஒரு தீர்ப்பு’ (The upstart that changed Malaysia’s media landscape)  என்றத் தலைப்பில், அதன் நிருபர் ஜொனாதன் ஹெட் எழுதியக் கட்டுரை, அந்த ஊடக நிறுவனத்தின் தொடக்க வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

“மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் நகர எல்லையில், ஒரு வணிகப் பகுதியின் நடுவில் அமைந்துள்ள இந்த ஊடக நிறுவனம், பத்திரிகைத் துறையில் நம்பமுடியாத ஒரு சோதனைத் தளமாகும். இது பலரின் தாக்குதல்களைப் பெற்றது.

“அனைத்து ஊடகங்களும் அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு நாட்டில், மலேசியாகினியின் வெற்றியும் அதன் நிலைத்தன்மையும் குறிப்பிடத்தக்கதாகும்; சுயாதீனமான, தரமான ஒரு செய்தி நிறுவனமாக இருப்பது கடினமானது, ஆபத்தானது மற்றும் பெரும்பாலும் அது ஓரங்கட்டப்பட்டிருக்கும்,” என்று அவர் எழுதியுள்ளார்.

தி கார்டியன்’ ஊடகத்தைச் சேர்ந்த, ரெபேக்கா ராட்க்ளிஃப், 2018-ஆம் ஆண்டில், அம்னோவின் தோல்விக்குப் பின்னர் பெற்ற ஊடகச் சுதந்திரம், இப்போது மீண்டும் பிரதமர் முஹைதீன் யாசினின் பிடியில் உள்ளது என்று கவலை தெரிவித்தார்.

61 ஆண்டுகள் ஆட்சி செய்த அம்னோவைப், ​​2018 பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கத்தால் மாற்றியபோது, ஊடகச் சுதந்திரம் மேம்படத் தொடங்கியது.

“இருப்பினும், கடந்தாண்டு பிப்ரவரியில் ஏற்பட்ட அரசு நிர்வாக வீழ்ச்சி, ஊடக சுதந்திரத்தை மீண்டும் கட்டுப்படுத்தத் தொடங்கியது.

“கடந்த ஆண்டு, அல் ஜசீரா உள்ளிட்ட, அரசாங்கத்தை விமர்சித்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன; அந்நாடு, வெளிநாட்டு தொழிலாளர்களை நடத்தும் விதம் குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக, அல் ஜசீரா செய்தி நிறுவனம் மீது விசாரணை நடந்து வருகிறது,” என்று தி கார்டியன் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, ஃபெடரல் நீதிமன்றம் தனது தீர்ப்பில், நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி மலேசியாகினிக்கு RM500,000 தண்டம் விதித்தது.

ஐந்து மணி நேரத்திற்குள், பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் சேகரித்து, RM500,000-க்கும் அதிகமான தொகையை மலேசியாகினி திரட்டியது.

நீதிமன்றத்தின் அத்தீர்ப்பு வழக்கறிஞர்கள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் அம்னோவைச் சார்ந்தவர்கள் உட்பட, பலரிடையே கருத்துச் சுதந்திரத்தின் தாக்கம் குறித்த கவலையை எழுப்பியது.

நியூயோர்க் டைம்ஸ் , ‘5 வாசகர்களின் கருத்துகள் – ஒரு செய்தி வலைத்தளத்திற்கு 124,000 அமெரிக்க டாலர் செலவு’ (5 Readers comments just cost a news website US124,000) என்று தலைப்புச் செய்தி வெளியிட்டது.

இதற்கிடையில், மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கானை மேற்கோள் காட்டி, இந்த முடிவானது, பொது நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எழுப்புவதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்று ஏபிசி நியூஸ் கூறியுள்ளது.

“இந்த முடிவு மலேசியாகினியை மட்டுமல்ல, மலேசிய ஊடக அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் மில்லியன் கணக்கான சமூக ஊடகப் பயனர்களின் கருத்து சுதந்திரத்தைப் பயமுறுத்தும் ஒரு தீர்ப்பாகும்.”

“இன்று சமூக ஊடகங்களில் நமக்கு ஆர்வம் உள்ள ஒரு சூழ்நிலையில், மலேசியாகினி போன்ற ஊடக அமைப்புகளைத் தண்டிப்பதை விட, விளக்கமளிப்பதும், கற்பிப்பதும் நமக்கு மிகவும் முக்கியம்,” என்று ஏபிசி கானை மேற்கோளிட்டுள்ளது.

இந்த வழக்கு, சிங்கப்பூர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பேங்காக் போஸ்ட் மற்றும் ஹாங்காங் சௌத் சீனா மார்னிங் போஸ்ட் போன்ற ஊடக அமைப்புகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.