எஸ்.ஓ.பி.-ஐ மீறினால் RM10,000 தண்டம், பிடிஆணையின்றி கைது

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) உத்தரவுகளை மீறுபவர்கள், கோவிட் -19 பரவல் தடுப்பு அவசரகாலச் சட்டத் திருத்தத்தின் கீழ், மார்ச் 11 முதல் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வர்.

மத்திய அரசியலமைப்பின் பிரிவு 150 (3)-இன் கீழ், மாட்சிமை தங்கியப் பேரரசர் வழங்கிய அவசரகால அதிகாரங்களின் அடிப்படையில், தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) திருத்தங்கள் நேற்று அரசிதழ் செய்யப்பட்டன.

மற்றவற்றுடன், இந்தச் சட்டத்தின் கீழான குற்றங்களுக்காக தனிநபர் தண்டம் RM1,000-லிருந்து RM10,000-ஆகவும் நிறுவனங்களுக்கு RM50,000-ஆகவும் அதிகரிக்கப்பட்டன.

தற்போது, ​​குற்றத்தைச் செய்யும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக RM1,000 தண்டம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

வழக்கு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டால், ஒரு குற்றத்திற்கு RM100,000 வரை தண்டம், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தற்போது, ​​சட்டம் 342-ன் கீழ், தண்டனைப் பெற்ற ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது முதல் குற்றத்திற்கான தண்டனை என்றால் தண்டம் மட்டும் விதிக்கப்படலாம். அடுத்தடுத்த குற்றங்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, தண்டம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பிடியாணை தேவையில்லை

இதற்கிடையில், அதே அவசரச் சட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் அல்லது பாதிக்கப்பட்டதாக நம்பப்படுபவர் அல்லது எந்தவொரு நெருங்கிய தொடர்பும் இருந்தால், அவருக்குக் கண்காணிப்பு அல்லது கண்டறி சாதனத்தை அணிய உத்தரவிடலாம்.

கண்டறி சாதனம் என்பது ஒரு வளையல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி வழங்கும் எந்தவொரு சாதனமும் அடங்கும், அதே நேரத்தில் அதை அழித்தல், சேதப்படுத்துதல், நீக்குதல் அல்லது மாற்றுவது போன்ற எந்தவொரு செயலும் குற்றமாகிறது.

சட்டம் 342-ன் கீழான பிற குற்றங்கள், தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் சுகாதாரத் தலைமை இயக்குநரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்காதது அல்லது மற்றவர்களை வேண்டுமென்றே நோய்க்கு ஆளாக்குவது ஆகியவை அடங்கும்.

இந்தச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை மீறும் எந்தவொரு செயலுக்கும் RM50,000-ஐத் தாண்டாத தண்டம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தண்டனைக்குட்பட்ட இன்னும் பிறக் குற்றங்கள், முகக்கவரி அணியாதது, தனிமைப்படுத்துதலுக்கு இணங்கத் தவறியது, வாடிக்கையாளர் விவரங்களைப் பதிவு செய்வதற்கான உபகரணங்களை வழங்கத் தவறியது, அனுமதியின்றி மாவட்டங்கள் / மாநிலங்கள் எல்லைகளைக் கடப்பது மற்றும் பொழுதுபோக்கு மைய நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.

கூடுதலாக, இந்தத் திருத்தம் அதிகாரிகளுக்கு “விசாரணை அதிகாரங்களை” வழங்க அனுமதிக்கிறது, அதாவது அதிகாரிகள் கைது செய்ய பிடியாணை எதுவும் தேவையில்லை.

ஜனவரி 11 அன்று அவசரநிலை அறிவிக்கப்பட்டது, ஆனால் மறுநாள் மட்டுமே அமல்படுத்தப்பட்டது.

கோவிட் -19 வழக்குகள் அதிகரித்ததை அடுத்து, அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, இருப்பினும் கோவிட் -19 தொற்றைக் கையாள அவசரநிலை அறிவிப்பு தேவையில்லை என்றும், பிரதமர் முஹைதீன் யாசின் தனது அரசாங்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கம் கொண்டது அது என்றும் பல விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

அவசரகால அறிவிப்பு பி.கே.பி.-யை மீறியவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்க அரசாங்கத்தை அனுமதித்தது என்று முஹைதீன் கூறினார்.