2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நன்கொடை – பிரதமர் மோடிக்கு கவுதமாலா அதிபர் நன்றி

கொரோனா தடுப்பூசி

2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை விற்பதற்கு பதிலாக நன்கொடையாக வழங்கியதற்காக கவுதமாலா அதிபர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

கவுதமாலா சிட்டி: இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரியில் நாடு முழுவதும் இந்த பணியானது தொடங்கி நடந்து வருகிறது.

முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி இன்று காலை வரையில் 1,42,42,547 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்தியாவில் உற்பத்தியான கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் இலங்கை, மாலத்தீவு, நேபாளம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், கவுதமாலா நாட்டுக்கும் இந்தியா சார்பில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  அந்நாட்டின் தேவைக்காக 2 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.

இதைப் பெற்றுக் கொண்ட பின்னர் கவுதமாலா அதிபர் அலிஜாண்டிரோ கியாம்மடெய் கூறுகையில், கொரோனா தடுப்பு மருந்துகளை விநியோகித்து உதவி புரிந்ததற்காக இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தியா தடுப்பு மருந்துகளை எங்களுக்கு விற்பனை செய்வதற்கு பதிலாக அவற்றை நன்கொடையாக வழங்கி உள்ளது. முன்கள சுகாதார பணியாளர்கள் நோயெதிர்ப்பு சக்தி பெறுவதற்கு அவை உதவும் என தெரிவித்துள்ளார்.

malaimalar