முன் எப்போதும் இல்லாத போரை எதிர்கொள்கிறோம் – ஹமாஸ் தலைவர் யாயா சின்வர்

முன் எப்போதும் எதிர்கொண்டிராத போரை தற்போது எதிர்கொண்டு வருவதாக ஹமாஸ் தலைவர் யாயா சின்வர் முதன்முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் இயக்கம், கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. காசாவின் எல்லையோரத்தில் உள்ள இஸ்ரேலின் நகரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் இயக்கத்தினர் வீதி வீதியாகச் சென்று இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்றனர். இந்தத் தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இரு தரப்புக்கும் இடையேயான இந்தப் போர் 2 மாதங்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அதன் தலைவர் யாயா சின்வர் என கூறப்படுகிறது. அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு முதன்முறையாக இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ஹமாஸின் ராணுவப் பிரிவான அல் கஸ்ஸாம், கடுமையான, முன் எப்போதுமில்லாத போரை எதிர்கொள்கிறது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையை நசுக்கும் பாதையில் அல் கஸ்ஸாம் உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடம் ஹமாஸ் ஒருபோதும் அடிபணியாது.

இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரை நாங்கள் குறிவைத்தோம். அவர்களில், 1,500-க்கும் மேற்பட்டோரை நாங்கள் கொன்றுள்ளோம். எங்கள் தாக்குதலில் 3,500-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். 750 இஸ்ரேலிய ராணுவ வாகனங்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அல் கஸ்ஸாம் அழித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

யாயா சின்வரின் இந்த தரவுகளை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் அல் கஸ்ஸாம் கடுமையான அழுத்தங்களை சந்தித்து வருவதாகவும், அதன் காரணமாகவே தங்கள் படையினரை ஊக்கப்படுத்தும் நோக்கில் மிகைப்படுத்தப்பட்ட தரவுகளை யாயா சின்வர் கூறி இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவில் தரைப்படை மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கையில் இதுவரை 156 வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும், 200-க்கும் குறைவான பாதுகாப்புப் படையினரே காயமடைந்துள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. வாகனங்கள் மீதான தாக்குதலைப் பொறுத்தவரை, சரியான எண்ணிக்கை தங்களிடம் இல்லை என தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை, அதேநேரத்தில் சில வாகனங்கள் மட்டுமே பழுது பார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும், மற்ற வாகனங்கள் உடனடியாக பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் களத்துக்குத் திரும்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் தனது இலக்குகளை நோக்கி படிப்படியாக முன்னேறி வருகிறது என்று தெரிவித்துள்ள அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், எங்கள் துப்பாக்கி குண்டுகளை யாயா சின்வர் விரைவில் சந்திப்பார் என்றும் எச்சரித்துள்ளார்.

 

-ht