கோவிட் -19 தடுப்பூசியைப் பெறுவதற்காக, “வரிசையை முந்திச் செல்லும்” நபர்களுக்கு RM50,000-க்கு மேல் போகாத் தண்டம் அல்லது அதிகபட்சம் ஆறு மாதச் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மார்ச் 11 முதல் அமலுக்கு வரும் அவசரகால (நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துதல்) (திருத்தம்) சட்டம் 2021-ன் கீழ், புதிய ஏற்பாடான பிரிவு 31-ன் படி, இந்த நடவடிக்கை எடுக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.
தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342)-இன் கீழ், குறிப்பிடப்படாத எந்தவொரு குற்றத்திற்கும் தண்டம் விதிக்க பிரிவு 31 அதிகாரமளிக்கிறது என்றார் அவர்.
“இந்தப் புதியத் துணைப்பிரிவின் கீழ் செய்யப்பட்ட விதிமுறைகள், எந்தவொரு செயலையும் விதிமுறைக்கு முரணான ஒரு குற்றமாக பரிந்துரைக்கக்கூடும்; மேலும், RM50,000-ஐ தாண்டாத தண்டம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.”
இன்று, புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சில், பிரதமர் திணைக்களத்தின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் தக்கியுதீன் ஹாசனுடன் இணைந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
டாக்டர் ஆதாம், கோவிட் -19 தடுப்பூசியின் வரிசையை முந்திச்சென்றது தொடர்பான எந்தவொரு புகாரையும் சுகாதார அமைச்சு இதுவரை பெறவில்லை என்றார்.
கடந்த திங்கட்கிழமை, தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன், கோவிட் -19 தடுப்பூசி திட்டத்திற்கான “வரிசையை முந்திச் செல்லும்” பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக முன்னணி வரிசை பட்டியலை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்றார்.
கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் பாதுகாப்பு சிறப்புக் குழு (ஜே.கே.ஜே.வி) மற்றும் முன்னணி ஊழியர்களை விவரிக்கும் வழிகாட்டுதல்கள் ஆவணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சராகவும் இருக்கும் கைய்ரி தெரிவித்தார்.
வழிகாட்டி ஆவணத்தில், அவரும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவும் கையெழுத்திட்டுள்ளனர், அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘முன்னணி ஊழியர்கள்’ வரையறைகள் சுகாதார அமைச்சு மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு இணையத்தளங்களில் https://www.vaksincovid.gov.my/ பதிவேற்றப்படும்.
- பெர்னாமா