பொதுத் தேர்தலுக்கு நன்கொடைகளைத் திரட்டுவதற்கு சில கும்பல்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பெயரைப் பயன்படுத்துவதாக மலாய் மொழி நாளேடான சினான் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தக் கும்பல்கள் மக்களை ஏமாற்றுவதற்கு அதி நவீன தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்துவதாக மசீச பொதுப் புகார் பிரிவுத் தலைவர் மைக்கல் சொங் கூறினார்.
தாங்கள் புக்கிட் அமானிலிருந்து அழைப்பதாகவும் தேர்தலுக்காக நன்கொடைகளைத் திரட்டுவதாகவும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து தங்களுக்கு வேண்டுகோள் வந்திருப்பதாக மூன்று தனிநபர்கள் புகார் செய்துள்ளதாக சொங் தெரிவித்தார்.
“அந்த அடையாளம் தெரியாத நபர்கள், பிரதமருடைய பொதுத் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவும் பொருட்டு 3,000 ரிங்கிட் முதல் 5,000 ரிங்கிட் வரையில் நன்கொடைகளைக் கோரியதாகவும் புகார்தாரர்கள் கூறினார். ஆனால் அந்த மூவரும் நன்கொடைகளைக் கொடுக்கவில்லை. அந்த விஷயத்தை மேலும் விசாரித்தனர்.”
“படியாக்கம் செய்யப்பட்ட எண்களிலிருந்து அந்த அழைப்புக்கள் வந்தது பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது,” என சொங் சொன்னார்.
இதனிடையே பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் சகோதரி உம்மி ஹாபில்டா, தாம் தேர்வு செய்யப்பட்டால் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கூறியதாகவும் அந்த நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
“நான் தகுதி பெற்றுள்ளேனா இல்லையா என்பதை முடிவு செய்வதை நான் தலைவர்களிடம் விட்டு விடுகிறேன். அவர்கள் எனக்கு எதிராக முடிவு செய்தாலும் பரவாயில்லை,” என அவர் சொன்னதாக அந்த ஏடு குறிப்பிட்டுள்ளது.
“எதிர்க்கட்சிகளின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதே எனக்கு முக்கியமாகும். நாடு முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன்,” என உம்மி ஹாபில்டா, பெர்னாமா வானொலி 24ன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாக அந்த ஏடு தெரிவித்தது.