மஇகா : அம்னோ பிஎன் உறுப்புக் கட்சிகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்

கருத்து | முந்தைய ம.இ.கா. வேட்பாளர்கள் தொடர்ச்சியாக மூன்று முறை தோல்வியடைந்ததால், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தை அம்னோவிடம் ஒப்படைக்குமாறு கோரிய சுங்கை சிப்புட் புத்ரி அம்னோ தலைவரின் அறிக்கையை நான் படித்தேன்.

முதலாவதாக, இது போன்ற “கற்களை எறிந்துவிட்டு, கைகளை மறைக்கும்”  தந்திரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேன்டுமென, அம்னோ உயர் தலைமைக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

நீங்கள் மஇகாவுடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், எங்களுடன் வெளிப்படையாக நீங்கள் பேசலாம்.

தேசிய முன்னணி உச்ச மன்றத்தின் விவகாரங்கள் பற்றி, குறிப்பாக மஇகா தலைவர்களின் பாரம்பரிய இடமாக இருக்கும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தின் விவகாரங்கள் குறித்து பேச ஒரு பிரதிநிதியை அனுப்ப வேண்டிய அவசியமில்லை.

பாரிசான் தேசிய உச்சமன்றக் கூட்டத்தில், மௌனம் சாதித்துவிட்டு, இதுபோன்ற சங்கடமான வேலைகளைச் செய்ய உங்கள் உறுப்பினர்களை ஏவாதீர்கள்.

இரண்டாவதாக, அம்னோவின் உயர் தலைமையில் இருப்பவர்களை மிகவும் திமிர்பிடித்தவர்களாகவும் ஆணவத்துடனும் இருக்க வேண்டாம் என்றும் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

எல்லா இடங்களையும் வெல்ல முடியும் என்பது போல அனைத்து இடங்களையும் போட்டியிடக் கேட்கும் பழக்கத்தை நிறுத்துங்கள். அம்னோவின் உயர் தலைமை அதன் உறுப்புக் கட்சிகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் ஆரம்பத்தில் இருந்தே பாரிசான் நேஷனலில் அம்னோவுக்கு விசுவாசமாக இருந்தன, கடினமான காலங்களில் அம்னோ அல்லது பாரிசான் நேஷனலில் இருந்து அவை ஓடவில்லை.

கடினமான காலமோ மகிழ்ச்சியான தருணமோ, ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் பாரிசான் நேஷனலுடன் இருக்கின்றன. உறுப்பு கட்சிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய அவசியத்தை அம்னோ தலைமை புரிந்துகொள்வதில் என்ன கடினம்?

 

முதலில் நீங்கள் பாஸ்-உடன் தேசிய ஒருமித்த கருத்து (முவாஃபாகாட் நேஷனல்) மற்றும் பெர்சத்துவுடன் தேசியக் கூட்டணியில் இணைந்து பணியாற்ற விரும்பினீர்கள். அந்த ஒத்துழைப்பு உங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்யாதபோது, ​​எங்களுடன் விவாதிக்காமல் அவர்களுடன் சண்டையிடுகிறீர்கள்.

அவர்களுடனான தொகுதி இருக்கை கலந்துரையாடல் உங்கள் விருப்பத்திற்குப் பொருந்தாதபோது, ​​இப்போது நீங்கள் உங்களுடன் இருக்கும் கூட்டணி கட்சிகளின் பாரம்பரிய நாற்காலிகளையும் எடுக்க விரும்புகிறீர்கள்.

பாரிசான் நேஷனல் உச்சமன்றத்தில் இந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்க ஏன் தைரியம் இல்லை? உங்களுடன் பாரிசான் நேஷனல் இணைந்திருக்க வேண்டும்.

அம்னோ பொது மாநாட்டில் பங்காளி கட்சிகளின் விசுவாசம் மற்றும் பலவற்றைப் புகழ்ந்து பேசிவிட்டு, இரண்டு நாட்களுக்குள், அவர்களை முதுகில் “குத்த” விரும்புகிறீர்களா?

உறுப்புக் கட்சிகளின் விவகாரங்களில் தலையிட விரும்புவதற்கு முன்பு, நீங்கள் உங்கள் உள் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணுங்கள்.

பங்காளி கட்சிகள் அம்னோவுடன் விட்டுக்கொடுத்து போக மாட்டார்கள் என்று கூறினால், கேமரன்மலை இடைத்தேர்தலில் கேமரன்மலையை எதற்காக, யாரைக் காப்பாற்றுவதற்காக ம.இ.கா. அம்னோவுக்கு விட்டுக்கொடுத்தது என்று அம்னோ தலைவரிடம் கேட்க நான் பரிந்துரைக்கிறேன்.

என்னைக் காப்பாற்றவா அல்லது அந்த நேரத்தில் பாரிசான் நேஷனல் தலைமையிலான இரண்டு மாநில அரசாங்கங்களில் ஒன்றைக் காப்பாற்றுவதற்காகவா? பதிலளிக்க அம்னோ தலைவர் முயற்சிக்கட்டும்.

அறிக்கையின் தர்க்கத்தை நாங்கள் பின்பற்றினால், கேமரன் மலையை ம.இ.கா.வுக்குத் திருப்பித் தர வேண்டும். ஜிஇ14-இல் கேமரன் மலை நாடாளுமன்றத்தை நான் வென்றேன். எனக்கு முன் இருந்த ம.இ.கா. வேட்பாளர்களும் வென்றனர்.

கேமரன் மலையை வென்ற பிறகு, அம்னோ ஏன் அதனைத் தன்னுடையதாக ஆக்கிகொள்ள விரும்புகிறது, முதலில் செய்த ஒப்பந்தம் “கடனாக” மட்டும்தானே?

எங்கள் தியாகத்தை அம்னோ மதிக்க வேண்டும், கடந்த ஆண்டு தேசியக் கூட்டணியின் (பி.என்.) கீழ் அமைச்சரவை அமைக்கப்பட்டபோது கூட, அம்னோ தலைவர் துணை அமைச்சர் மற்றும் செனட்டர் பதவிகளுக்காக ம.இ.கா. சார்ந்தவர்களின் பெயரை எடுத்துச் செல்லவில்லை, அம்னோ தலைவர்களை மட்டுமே அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்களாக நியமிக்க பரிந்துரைத்தார்.

அம்னோ தலைவரால் இதை மறுக்க முடியுமா?

இருப்பினும், தேசிய முன்னணி போராட்டத்தின் அடிப்படையில், நாங்கள் இன்றுவரை அம்னோவுக்கு விசுவாசமாக இருக்கிறோம். உறுப்புக் கட்சிகளின் இந்த விசுவாசத்தை குருட்டுத்தனமாகக் கருத வேண்டாம்.

ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் எப்போதும் உங்களைப் “பின்தொடர்பவர்” என்று நினைக்க வேண்டாம். எங்கள் விசுவாசத்திற்கும் வரம்புகள் உள்ளன.

மஇகா தலைவர் எழுப்பியக் கேள்விக்கு முதலில் பதிலளிக்கவும். ஜிஇ15-க்கான பாரிசான் நேஷனல் பிரதமர் வேட்பாளர் யார்? உறுப்புக் கட்சிகளின் விவகாரங்களைத் தொடும் முன், ம.இ.கா. மற்றும் ம.சீ.ச.வுக்கான இடங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தும் முன் இந்தக் கேள்விக்கானப் பதிலை முதலில் தெரிவு செய்யவும்.

எல்லாவற்றையும் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில், அவசியம் என்றும் அது நடக்கும் என்றும் கருத வேண்டாம்.

உங்கள் கட்சிக்காக முடிவு செய்ய உங்களுக்கு உரிமை இருப்பதைப் போலவே, எங்கள் கட்சிக்காக முடிவு செய்வதற்கான உரிமை எங்களுக்கும் உள்ளது. இரண்டு முடிவுகளும் ஒரே மாதிரியானவை அல்ல. உறுப்புக் கட்சிகள் உங்களை மதிக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், முதலில் நீங்கள் அவர்களை மதியுங்கள்.

அம்னோ மிகவும் வலிமையானது, அதற்கு உறுப்புக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை என்று அம்னோ நினைத்தால், அம்னோ சின்னத்தை மட்டும் பயன்படுத்தி ஜிஇ15-ல் போட்டியிடுவது நல்லது, பாரிசான் நேஷனலாகப் போட்டியிடத் தேவையில்லை.


சிவராஜ் சந்திரன், மஇகா உதவித் தலைவர்