துணை கல்வியமைச்சர் II மா ஹாங் சூனின் தலையீட்டைத் தொடர்ந்து, ஜொகூர், பத்து பஹாட்டில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளி, சில புறப்பாட நடவடிக்கைகளுக்கான இனம் மற்றும் பாலினத் தேவைகளைத் இரத்து செய்தது.
முன்னதாக, டத்தோ பெந்தாரா லுவார் படிவம் 1 மாணவர்களுக்கு மூன்று இணைப் பாடத்திட்ட நடவடிக்கைகளைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டது. அதில், சில நடவடிக்கைகள் சில இனங்கள் மற்றும் பாலினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிறரின் கவனத்தை ஈர்த்தது.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கால்பந்து மற்றும் சேப்பாக் தக்ரோ விளையாட்டுகள் மலாய் மாணவர்கள் மட்டும் என்றும், வலைப்பந்து மலாய் பெண் மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், கூடைப்பந்து மற்றும் பிங் பாங் விளையாட்டுகளுக்குச் சீன ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் சொல்லப்பட்டது.
பள்ளி குறைந்த அளவிலான வசதிகளைக் கொண்டிருப்பதால், இவ்வாறு செய்யப்பட்டதாகப் பள்ளி முதல்வர் அப்துல் ரசாக் ஹமீட், இந்தப் பிரிவினையைத் தற்காத்து பேசியுள்ளார்.
பள்ளியின் அத்தகைய நிபந்தனைகளை உடனே இரத்து செய்யுமாறு கூறி, தானே ஜொகூர் மாநிலக் கல்வித் துறையைத் தொடர்பு கொண்டதாக மா இன்று மலேசியாகினியிடம் கூறினார்.
இந்தக் கொள்கை “தவறானது” என்றும் அவர் விவரித்தார், ஏனெனில் இது தேசியக் கல்வி தத்துவத்திற்கு எதிரானது என்றார் அவர்.
“இது பள்ளி முதல்வரின் தவறு … விளையாட்டு நடவடிக்கைகள் மூலம் நாம் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்க முடியும், மாணவர்கள் ஒன்றாக விளையாடுகிறார்கள் (மற்றும்) புரிந்துணர்வு, நெருக்கம் மற்றும் ஒற்றுமை உணர்வை இது அதிகரிக்கும்.
“இந்தக் கொள்கையை மாற்றுமாறு நான் பள்ளியைக் கேட்டுள்ளேன், அது நடந்திருக்கக் கூடாது. இது நம் (தேசியக் கல்வி) வளர்ச்சித் திட்டத்திற்கு எதிரானது,” என்று அவர் கூறினார்.
அப்பள்ளியின் இணை பாடத்திட்ட நடவடிக்கை பட்டியலின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பையும் மலேசியாகினிக்கு மா காட்டினார். இனி எந்த விளையாட்டுக்கும் இன மற்றும் பாலின கட்டுப்பாடுகளை விதிக்கப்படாது.
விளையாட்டு நடவடிக்கைகள் மட்டுமின்றி, மொழி, பாடங்கள், நலன்புரி மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சில இனங்கள் மட்டுமே சில கழகங்களில் சேர முடியும் என்றும் அப்பள்ளி முன்பு நிபந்தனைகள் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.