பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 15 வரை, மனிதவளத் திணைக்களம் (ஜே.தி.கே.) நடத்திய ஆய்வுகளில், மொத்தம் 10,961 அல்லது 73.9 விழுக்காடு முதலாளிகள் வீட்டுவசதி, தங்குமிடம் மற்றும் பணியாளர் வசதிகள் சட்டம் 1990-இன் (சட்டம் 446) குறைந்தபட்ச தரநிலைகளுக்கு இணங்கத் தவறிவிட்டனர்.
அக்காலகட்டத்தில், நாடு முழுவதும் 14,835 முதலாளிகள் மீது, 95,870 பணியாளர்கள் சம்பந்தப்பட்ட தங்குமிடங்கள் குறித்து, ஜே.தி.கே. ஆய்வுகள் நடத்தியதாக மனிதவளத் துணை அமைச்சர் அவாங் ஹாஷிம் தெரிவித்தார்.
“ஆய்வு செய்யப்பட்ட மொத்த முதலாளிகளில், 3,874 அல்லது 26.1 விழுக்காடு முதலாளிகள், பணியாளர் தங்குமிட வசதிகளுக்கான அளவுகோல்களை நிறைவேற்றியுள்ளனர், மற்றவர்கள் இன்னும் இந்தச் சட்டத்தைக் கடைபிடிக்கத் தவறிவிட்டனர். 616,216 தொழிலாளர்கள், அதாவது 572,518 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் 43,698 உள்ளூர் தொழிலாளர்கள் மீதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
“முழு ஆய்விலிருந்தும் மொத்தம் 625 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டன, இதில் மனிதவளத் தலைமை இயக்குநரின் அனுமதி சான்றிதழ் பெறாத விடுதி குற்றங்கள், உள்ளூராட்சி மன்றச் சட்டங்களுக்கு இணங்காத விடுதி மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு மற்றும் சாப்பாட்டு பகுதிகளை ஏற்பாடு செய்யாதது ஆகியவை அடங்கும்,” என்று அவர் கூறினார்.
முதலாளிகள் வழங்கும் தங்குமிட வசதிகள் ஒவ்வொரு உள்ளூர் அல்லது வெளிநாட்டினர் ஊழியருக்கும் ஓய்வெடுக்கவும், நாட்டில் வசிக்கவும் பாதுகாப்பான மற்றும் உகந்த சூழலைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவாங் கூறினார்.
“ஜே.தி.கே வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது, எனவே நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது, பரிந்துரைக்கப்பட்ட சட்டத்திற்கு இணங்கத் தவறும் முதலாளிகளைத் தண்டிப்போம். இதுவரை, ஜே.தி.கே 34 இடமாற்ற உத்தரவுகளையும், 2,417 பழுதுபார்ப்பு அல்லது விடுதிகளுக்கான மேம்பாட்டு வழிமுறைகளையும், 7,885 இணக்க வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
“அனைத்து முதலாளிகளும் தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பையும் வாழ்க்கையையும் பாதுகாப்பதற்காகச் சட்டத்திற்குக் கட்டுப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே நல்ல துப்புரவு, காற்றோட்டம் இல்லாத மற்றும் நன்கு நிர்வகிக்கப்படாத வசிப்பிடங்களால் பல நேர்மறையான கோவிட் -19 நேர்வுகள் நிகழ்கின்றன,” என்று அவர் கூறினார்.
-பெர்னாமா