தடுப்புக்காவல் மரணம் மற்றும் அதிகார அத்துமீறலை ஒழிக்கவும் (எடிக்ட்) என்ற மனித உரிமைகள் குழு, கொரோனர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அந்த நீதிமன்றங்கள் சம்பந்தப்பட்ட புதியச் சட்டங்களை இயற்றவும் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தது.
எந்தவொரு அரசியல் கூறுகளும் பாகுபாடும் இல்லாமல், நீதிமன்றங்கள் மூலமாக தவிர, தடுப்புக்காவல் மரண வழக்குகளுக்கு நீதி கிடைக்க வேறு வழியில்லை என்று எடிக்ட் வலியுறுத்துகிறது.
“கொரோனர் நீதிமன்றத்தின் பங்கு வலுப்படுத்தப்பட வேண்டும், கொரோனர் நீதிமன்றச் சட்டம் இயற்றப்பட வேண்டும். அதே நேரத்தில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் உள்ள விதிகளுக்கும் இணங்க வேண்டும்.
“சரியான மற்றும் முறையான செயல்முறைகளைக் கடைபிடித்ததால், குடும்பத்திற்கு ஆதரவாக பல நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்துள்ளதை வரலாறு நிரூபித்துள்ளது.
“ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பில், எந்தவொரு அதிருப்தியும் இருந்தால் உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படலாம்,” என்று அது இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மரண வழக்கு தொடர்பான விசாரணையும், சம்பவம் நடந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றது அது.
“தடுப்புக்காவலில் நேர்ந்த ஒவ்வொரு மரணத்திற்கும் ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் ஏற்பட்ட மரண வழக்குகளும் அடங்கும்,” என்று அது மேலும் கூறியது.
சுயாதீன போலிஸ் புகார் வழக்குகள் ஆணையம் (ஐபிசிஎம்சி), தடுப்புக்காவல் மரணங்களை விசாரிப்பதற்கான ஒரு பொறிமுறையல்ல என்றும் எடிக்ட் வலியுறுத்தியது.
ஏனென்றால், ஐபிசிஎம்சி என்பது காவல்துறையின் தவறான நடத்தை குறித்து விசாரிக்கும் ஓர் ஆணையம் என்று எடிக்ட் கூறியது.
“இதன் பொருள், எந்தவொரு முறைகேடு குற்றச்சாட்டுகளும் ஐபிசிஎம்சிக்குக் கொண்டு வரப்படும், தடுப்புக்காவல் மரணங்கள் தொடர்பான விசாரணை சட்டத்தின் படி முடிந்ததும்,” என்று அது தெரிவித்தது.
இதற்கிடையில், ‘மரண தண்டனை மற்றும் சித்திரவதைக்கு எதிரான மலேசியர்கள்’ (Malaysians Against Death Penalty and Torture) செய்தித் தொடர்பாளர், சார்லஸ் ஹெக்டர் ஃபெர்னாண்டே, தற்போதைய நீதித்துறை மற்றும் சட்டச் சேவைகள் ஆணைக்குழுவிற்குப் பதிலாக கொரோனர்கள் உட்பட நீதித்துறை சேவையின் அனைத்து உறுப்பினர்களும் நேரடியாக நீதித்துறையின் கீழ் வைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஒரு தனி அறிக்கையில் கூறியுள்ளார்.
“அதற்கு மாற்றாக, மலேசியா ஒரு சுயாதீன கொரொனர் அமைப்பை நிறுவுவதற்கான நேரம் கணிந்துவிட்டது போலும், 2009 மரண தண்டனை மற்றும் நீதிச் சட்டத்தைக் கொண்டுள்ள பிரிட்டனைப் போல.
“ஏற்கனவே, தங்கள் வழக்குகளின் சுமையில் இருக்கும் மாஜிஸ்திரேட்டுகளுக்கு, கொரோனரின் பொறுப்புகளில் கவனம் செலுத்த போதுமான நேரம் இருக்காது,” என்று அந்த மனித உரிமைகள் வழக்கறிஞர் கூறினார்.
கடந்த 15 நாட்களில், தடுப்புக்காவல் மரணங்கள் குறைந்தது மூன்று பதிவாகியுள்ளன.
சமீபத்தியது, 36 வயதான லாரி டிரைவர், உமர் ஃபாரூக் அப்துல்லா @ ஹேமநாதன், தென் கிள்ளான் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் (ஐபிடி) இறந்து போனார்.