பி.டி.பி.ஆர்.-உடன் தொடர்பில்லாதத் திட்டங்களை ஒத்திவையுங்கள் – மஸ்லி வலியுறுத்து

ஜூன் 13 மற்றும் 14 ஆகியத் தேதிகளில் பள்ளி அமர்வு மீண்டும் திறக்கப்படும்போது, இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) அமர்வுடன் தொடர்பில்லாதத் திட்டங்களைச் செயல்படுத்துவதை ஒத்திவைக்குமாறு பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கல்விக் குழு கல்வியமைச்சை வலியுறுத்தியுள்ளது.

“இந்தப் பிடிபிஆர் அல்லாதத் திட்டங்கள் இப்போதைக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும்,” என்று முன்னாள் கல்வி அமைச்சரும், பி.எச். கல்விக் குழுவின் தலைவருமான மஸ்லீ மாலிக் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பி.டி.பி.ஆர். செயல்பாட்டை மேம்படுத்துவதில், ஆசிரியர்கள் முழுமையாக கவனம் செலுத்த இடம் கொடுப்பதற்கு இந்தத் தற்காலிக ஒத்திவைப்பு அவசியம் என்று மஸ்லீ கூறினார்.

இந்த நேரத்தில், பிடிபிஆர் அமலாக்கத்தின் வெற்றி முக்கியமானது, எந்தவொரு மாணவரும் கல்வியில் பின் தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மற்றும் வசதி குறைந்த மாணவர்கள் என்று அவர் விளக்கப்படுத்தினார்.

க்ஜ்ஞ்”மக்கள் பி.கே.பி. 3.0-க்கு மிகவும் தயாராக உள்ளனர், நமக்கு 2 ஆண்டுகள் அனுபவம் உண்டு, கல்வித் துறை உட்பட, ஆனால் இதற்கு முன் ஏற்பட்ட கைவிடப்படும் மாணவர்கள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

“இணைய அணுகல் சிக்கல்கள் மற்றும் சாதனங்கள் இல்லாததால், பல மாணவர்கள் இன்னும் இயங்கலை கற்றலைப் பின்பற்ற முடியவில்லை. பல ஆசிரியர்கள் இணையம் மூலம் கற்றல் மற்றும் வழிகாட்டுதலுக்குப் புதியவர்கள். எனவே, அவர்கள் கற்றுக் கொள்ளவும் கற்பிக்கவும் வேண்டும்,” என்று அந்த சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

ஒத்திவைக்கப்பட வேண்டிய திட்டங்களில், பள்ளி உருமாற்றம் திட்டம் 2025 (திஎஸ்25), உயர் ஒழுங்கு சிந்தனை திறன்களை வளர்க்கும் பள்ளி விரிவாக்க மதிப்பீடுகளைச் செயல்படுத்துதல் (கேபாட்) போன்றவை என மஸ்லீ கூறினார்.

கூடுதலாக, மஸ்லீ மேற்கோள் காட்டியப் பிற திட்டங்களில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (ஸ்தெம்) பாடத்திட்டம், செயல்திறன் உரையாடல், மலேசியக் கல்வி தரம் தரஅலை 2 (எஸ்.கே.பி.எம்.ஜி 2) போன்றவற்றை நடைமுறைப்படுத்துதல் மற்றும் கல்விச் சேவை அதிகாரிகளின் ஒருங்கிணைந்த மதிப்பீட்டைச் செயல்படுத்துதல் (பிபிபிபிபி) ஆகியவையும் அடங்கும்.

நேற்று, கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின், பி.டி.பி.ஆர். முறை ஜூன் 13 மற்றும் 14 முதல் 25 நாட்களுக்குச் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.