12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சோதனை- பைசர் நிறுவனம் தொடங்கியது

பைசர் நிறுவன தடுப்பூசி

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு நாடுகளும் இறக்குமதி செய்துள்ளன. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

வாஷிங்டன்: கொரோனா வைரசுக்கு எதிராக அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் ஆகியவை இணைந்து தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது. இந்த மருந்துக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்து பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.

அதேபோல் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு நாடுகளும் இறக்குமதி செய்துள்ளன. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனையை பைசர் நிறுவனம் மேற்கொண்டது.

இதில் தடுப்பு மருந்து நல்ல பயன் அளித்ததை தொடர்ந்து அந்த தரவுகளை அமெரிக்க அரசிடம் வழங்கி அனுமதி கேட்டது. இதை ஆராய்ந்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர் ஆணையம் 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசியை செலுத்த ஒப்புதல் அளித்தது.

அதேபோல் இங்கிலாந்திலும் பைசர் தடுப்பு மருந்தை 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கையை பைசர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்கான சோதனையை தொடங்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எங்களது தடுப்பூசியை 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடம் பரிசோதனை செய்ய ஒரு பெரிய ஆய்வை தொடங்க உள்ளோம். இந்த ஒரு வீரியமான நடவடிக்கையை தேர்ந்தெடுத்துள்ளோம்.

இந்த ஆய்வு அமெரிக்கா, பின்லாந்து, போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 90-க்கும் மேற்பட்ட மருத்துவ தளங்களில் 4500 குழந்தைகளிடம் நடத்தப்படும் ஆய்வில் 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து 10 மைக்ரோ கிராமும், 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 மைக்ரோ கிராம் அளவும் கொடுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு தடுப்பூசி போடுவது மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கும், தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கும் ஒரு முக்கியமானதாக இருக்கும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

maalaimalar