2021, ஜூன் 4 நிலவரப்படி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுங்கு (எஸ்.எம்.இ.) , RM12.12 பில்லியன் இலகு கடனுதவிகளை உள்ளூர் வங்கிகள் அங்கீகரித்துள்ளன என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
தேசிய வங்கியால் (பிஎன்எம்) இயக்கப்படும் இலகு கடன் உதவி, 25,680 எஸ்.எம்.இ.களுக்குப் பயனளிக்கும் என்று அவர் கூறினார்.
இந்தத் தொகையில், சிறப்பு உதவி (எஸ்.ஆர்.எஃப்) நிதிகள், ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் வசதிகள் (ஏ.டி.எஃப்), அனைத்து பொருளாதாரத் துறை வசதிகள் (ஏ.இ.எஸ்) மற்றும் வேளாண் உணவு வசதிகள் (ஏ.எஃப்) ஆகியவை அடங்கும்.
“எஸ்ஆர்எஃப் நிதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பிஎன்எம் நிதி மூலம் ஏடிஎஃப், ஏஇஎஸ் மற்றும் ஏஎஃப் போன்ற நிதித் திட்டங்களுக்கு எஸ்.எம்.இ.கள் இன்னும் விண்ணப்பிக்க முடியும்,” என்று அவர், இன்று வெளியிடப்பட்ட 57-வது தேசிய இடை-நிறுவனப் பொருளாதாரத் தூண்டுதல் அமலாக்கத்தின் அறிக்கையில் தெரிவித்தார்.
ஜூன் 4-ஆம் தேதி நிலவரப்படி, 13,869 வணிகங்களுக்கு RM67.5 மில்லியன் மானியங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் சேவைகளுக்கான சந்தாவிற்கான கடன்கள் வடிவில் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெங்கு ஜஃப்ருல் கூறினார்.
‘பென்ஜானா’ சுற்றுலாத் துறையின் நிதியுதவிக்காக, எஸ்.எம்.இ.க்கள் மற்றும் மைக்ரோ எஸ்.எம்.இ.க்காக அரசாங்கம் RM600 மில்லியனை ஒதுக்கியுள்ளது என்றார் அவர்.
“ஜூன் 4-ஆம் தேதி நிலவரப்படி, இந்த நிதிக்கு 666 விண்ணப்பங்கள் வந்துள்ளன, 327 விண்ணப்பங்கள் RM65.1 மில்லியன் நிதியுதவியுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், சில்லறை மற்றும் சேவைத் துறைகள் உட்பட, 12,667 மைக்ரோ எஸ்.எம்.இ.களுக்குப் பயனளிப்பதற்காக மொத்தம் RM421.2 மில்லியன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
- பெர்னாமா