ஹசான் அலி: “நான் பக்காத்தானுடன் ஒத்துழைக்கத் தயார்”

பாஸ், பக்காத்தான் ராக்யாட் ஆகியவை, மலாய், இஸ்லாம், மன்னராட்சி கோட்பாடுகளை மேம்படுத்தி தற்காக்கும் வரையில் அவற்றுடன் அணுக்கமாக தொடர்ந்து வேலை செய்யத் தாம் தயாராக இருப்பதாக இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினர் ஹசான் முகமட் அலி கூறுகிறார்.

பாஸ் கட்சிக்குள் தாம் தொடர்ந்து சிரமங்களை எதிர்ந்நோக்கி வந்தால் அதனை விட்டு அவர் விலகுவாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஹசான் அது அவ்வளவு எளிதல்ல என்றார்.

“நான் நீண்ட காலமாக பாஸ் கட்சியில் இருந்து வருகிறேன். உடனே வெளியேறுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. நான் நண்பர்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும். முப்திக்கள், ஆலோசகர்கள், மூத்த அரசியல்வாதிகள் ஆகியோருடனும் நான் அவசியம் பேச வேண்டும்.”

“என்றாலும் நான் போராடுகின்ற அந்த மூன்று கோட்பாடுகளை எந்த அமைப்பும் தொடர்ந்து ஆதரிக்காது போனால் அது நடக்கக் கூடும்,” என ஹசான் கோலாலம்பூரில் தமது இல்லத்தில் நடத்திய நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

அடுத்து அவரிடம் பாஸ் கட்சிக்கும் பக்காத்தானுக்கும் தொடர்ந்து விசுவாசமாக இருப்பாரா என அவரிடம் வினவப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,” தாம் “விசுவாசம்” என்னும் சொல்லைப் பயன்படுத்துவதை விரும்பவில்லை என்றார். காரணம் அந்த சொல் மற்ற பல அர்த்தங்களைக் கொண்டு வந்து விடும். அல்லாவுக்கு தாம் “விசுவாசமாக” இருப்பதாக வலியுறுத்திய அவர், அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட  சூழ்நிலையில் மனிதர்களுக்கு “விசுவாசமாக” இருக்க வேண்டும் என இஸ்லாம் கூறவில்லை என்றும் ஹசான் குறிப்பிட்டார்.

“மாறுபட்ட அடிப்படையில் தவறாக மேற்கோள் காட்டப்படுவதை காண நான் விரும்பவில்லை. எடுத்துக்காட்டுக்கு சுல்தானுக்கு விசுவாசமாக இருக்க வேண்டியதில்லை என நான் சொன்னதாகக் கூட கூறப்படலாம்.”

ஆகவே பாஸ், பக்காத்தான் ஆகியவற்றுடனான என்னுடைய உறவுகளை “அணுக்கமாக வேலை செய்வது” என்ற வார்த்தைகளால் நான் வருணிக்க விரும்புகிறேன் என்றார் ஹசான்.

“நான் அவற்றுக்கு உதவுகிறேன். அவை எனக்கு உதவுகின்றன”, என அவர் விளக்கினார்.

ஹசான், தமது கோம்பாக் செத்தியா சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் போட்டியிடுவதற்குப் போதுமான நியமனத்தைப் பெறத் தவறியுள்ள விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  

“நியமனங்கள் என்பது சிறிய விஷயங்களாகும். என் போராட்டம் இஸ்லாம் என்ற பெரிய போராட்டமாகும். ஆகவே என்னைப் பொறுத்த மட்டில் அது முக்கியத்துவம் இல்லாதது”, என முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளருமான அவர் சொன்னார்.

தாம் நியமனம் செய்யப்படாவிட்டாலும் மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றுபடுத்தும் எண்ணத்திலிருந்து தம்மையும் தமது குழுவினரையும் அது தடுத்து விடாது என அவர் மேலும் சொன்னார்.

TAGS: