மோட்டார் வாகன உரிமம் (எல்.கே.எம்.) மற்றும் மலேசிய ஓட்டுநர் உரிமம் (எல்.எம்.எம்.) புதுப்பித்தல் மீதான தடை காலம், டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் கூறினார்.
எவ்வாறாயினும், செல்லுபடியாகும் காலம் காலாவதியான எல்.கே.எம். உரிமையாளர்கள், தங்கள் வாகனங்கள் செல்லுபடியாகும் காப்பீட்டால் பாதுகாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆய்வு நோக்கங்களுக்காக காப்பீட்டு பாதுகாப்பு சான்றிதழைக் காட்ட வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு முன்னர், எல்.கே.எம். மற்றும் எல்.எம்.எம். புதுப்பித்தல் காலம் செப்டம்பர் 30 வரை நிர்ணயிக்கப்பட்டது, சாலை போக்குவரத்து துறை (ஜே.பி.ஜே.), போஸ் மலேசியா பெர்ஹாட், மைஇஜி (MyEG) சென்.பெர். சேவைகள் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட வாகன ஆய்வு மையம் (புஸ்பகோம்) ஆகியவற்றின் முகப்புகளில் அவற்றைப் புதுப்பிக்க முடியும்.
பொதுமக்களின் கருத்துகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, ஜே.பி.ஜே. மற்றும் புஸ்பாகோம் முகப்புகளை 100 விழுக்காடு திறனுடன் மீண்டும் திறக்க அமைச்சு ஒப்புக்கொண்டதாக வீ கூறினார், இது தொடர்புடைய அனைத்து விஷயங்களும் இந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 6) தொடங்குகிறது.
செப்டம்பர் 6 முதல், ஜே.பி.ஜே. இயங்கலை சந்திப்பு முறையை நிறுத்தும். முகப்புகளில் சேவை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் முழுமையான தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் மைசெஜாத்தெரா விண்ணப்பத்தில் கோவிட் -19 தொற்றின் குறைந்த ஆபத்து நிலையைக் காட்ட வேண்டும்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில், போக்குவரத்து அமைச்சில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார் .
வீயின் கூற்றுப்படி, பொதுமக்கள் மைசிகாப் (mySIKAP) ஜேபிஜே வலைதளம், போஸ் மலேசியா, மைஇஜி, புஸ்பகோம் மூலமாக இயங்கலை சேவைகளைப் பயன்படுத்தி ஜேபிஜே தொடர்புடைய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
“இது ஜேபிஜே முகப்புகளில் நெரிசலைத் தவிர்க்கவும், எல்.கே.எம். மற்றும் எல்.எம்.எம்.-ஐ புதுப்பிக்க பொதுமக்களுக்கு வசதியை வழங்கவும் உதவும்” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், கோவிட் -19 தொற்றுநோயைத் தடுக்க, முகப்புகளில் அமைக்கப்பட்ட எஸ்ஓபி-க்களைக் கடைபிடிக்குமாறும் போக்குவரத்து அமைச்சு பொதுமக்களுக்கு நினைவூட்டியது.
-பெர்னாமா