லினாஸ் பி.டி.ஃப். உருவாக்க மார்ச் 2022 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது

லினாஸ் அரிய மண் கொட்டும் நிரந்தர நிலப்பரப்பு வசதியை (பிடிஎஃப்) உருவாக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டதை அரசாங்கம் இன்று உறுதி செய்துள்ளது.

இத்தகவலை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா இன்று மக்களவையில் தெரிவித்தார்.

அந்த வசதியை உருவாக்க சுரங்க நிறுவனத்திற்கு இந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி வரையில் நிர்ணயிக்கப்பட்டக் காலகெடு, இப்போது மார்ச் 2022 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம், அணுசக்தி உரிமம் வாரியம் (ஏ.இ.எல்.பி.) மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சிற்கு, சுற்றுச்சூழல் மதிப்பீடு (இ.ஐ.ஏ.) மற்றும் கதிரியக்க தாக்க மதிப்பீடு (ஆர்.ஐ.ஏ.) அறிக்கையை லினாஸ் சமர்ப்பித்ததாக ஆதாம் கூறினார்.

முன்னதாக, பி.டி.ஃப். உருவாக்கத்திற்கான காலநீட்டிப்பை, முந்தைய அமைச்சர் கைரி ஜமாலுடின் அனுமதித்ததாக மலேசியாகினியிடம் ஒரு தகவல் கூறியது.

அந்நிறுவனம் அதன் உரிமம் காலாவதியாகும்போது, மார்ச் 2, 2023 வரை காலக்கெடுவை நீட்டிக்க முயற்சித்ததாகவும், ஆனால் கைரி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அந்த ஆதாரம் கூறியது.

ஆதாரத்தின் கூற்றுபடி, அமைச்சு காலகெடுவை நீட்டிக்க ஒப்புக்கொண்டதற்கு, பிடிஎஃப் கட்டிடத் தளத்தில் மாற்றங்கள் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளும் காரணமாக இருந்தன.

லினாஸ் ஆரம்பத்தில் புக்கிட் கெத்தாம்’மில் ஒரு பி.டி.ஃப்.-ஐ உருவாக்க திட்டமிட்டது – பகாங், குவாந்தானில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள ஒரு வனப்பகுதி. இருப்பினும், இந்தத் திட்டத்தை ஏப்ரல் மாதம் சுற்றுச்சூழல் துறை நிராகரித்தது.

எனவே, லினாஸ் அதன் கவனத்தைக் கேபேங் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள புதிய தளத்திற்கு மாற்றியது, இது லினாஸ் மேம்பட்ட பொருட்கள் ஆலைக்கு (LAMP) அருகில் உள்ளது.