பாஸ் கட்சி அண்மையில் சமூக நல நாட்டுக்கான 10 அம்சத் திட்டத்தை வெளியிட்டது. அதனைக் கடுமையாக குறை கூறும் பல அறிஞர்கள், ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரது அறிக்கைகளை இன்று முக்கிய மலாய் மொழி நாளேடுகள் வெளியிட்டுள்ளன.
அந்த யோசனை ஏற்கனவே பிஎன் அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளரான சே ஹம்டான் சே முகமட்-டை மேற்கோள் காட்டி உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
“நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இலவச டியூசன் வகுப்புக்களை நடத்துவதற்கான பரிந்துரைகளை நான் அதில் பார்க்கிறேன். ஆனால் அந்த யோசனையைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஏற்கனவே அமலாக்கியுள்ளார்,” என சே ஹம்டான் கூறினார்.
மற்ற மாநிலங்களை விட பின் தங்கியிருக்கும் கிளந்தான், கெடா மாநிலங்களில் பாஸ் முதலில் தனது திட்டத்தை அமலாக்க வேண்டும் என அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் கூறியதாக சினா ஹரியான் தகவல் வெளியிட்டுள்ளது.
“பாஸ் ஆட்சி புரியும் இரண்டு மாநிலங்களும் இன்னும் வளர்ச்சி அடையாத நிலையில் அது எப்படி அந்த 10 அம்சத் திட்டம் பற்றிக் கூற முடியும் ?” என அகமட் வினவியதாக அந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளது.
பெரித்தா ஹரியான் பாஸ் கட்சியின் யோசனைக்கு ஒவ்வொரு அம்சமாக பதில் அளிக்கும் செய்தியை தனது இன்றைய பதிப்பில் வெளியிட்டுள்ளது.
பாஸ் கட்சி கூறும் ‘கருணையுள்ள, அமைதியான, ஐக்கிய சமுதாயக் கோட்பாடு’ ஒரே மலேசியா கோட்பாட்டைப் போன்றது என அது கூறியுள்ளது. அந்த இஸ்லாமியக் கட்சியின் ‘நீடித்த, சம நிலையான, நியாயமான பொருளாதாரம்’, புதிய பொருளாதார வடிவத்துக்கு இணையாக உள்ளது. மக்களுக்குத் தரமான சுகாதாரக் கவனிப்பை வழங்குவதாக பாஸ் அளித்துள்ள வாக்குறுதி, 135 மருத்துவமனைகளும் 2815 மருந்தகங்களும் ஏற்கனவே அமைக்கப்பட்டு மக்களுக்கு சேவையாற்றி வருவதின் மூலம் நனவாகி விட்டது பெரித்தான் ஹரியான் கூறியது.
சமூக நல நாடு: பாஸ் வழங்கும் திட்டம் ( Negara Berkebajikan: Tawaran PAS ) என்னும் தலைப்பிலான அந்தப் புத்தகம் கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியிடப்பட்டது. அதனை கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் எழுதியுள்ளார்.