ஃபைசர் தடுப்பூசியை ஊட்ட மருந்தாக சுகாதார அமைச்சு அங்கீகரித்தது

கோவிட் -19 ஃபைசர் தடுப்பூசி ஊட்ட மருந்தளவை, அதாவது கொமிர்னேட்டியை, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, இரண்டாவது மருந்தளவுக்குப் பின், குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பிறகு என்ற நிபந்தனையுடன் ஒப்புதல் வழங்கப்படுகிறது.

இன்று நடந்த 365-வது மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் கூட்டத்தில், இது அங்கீகரிக்கப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

“நாட்டில் ஊட்ட மருந்தளவு பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் கோவிட் -19 தடுப்பூசி இது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

நிபந்தனை பதிவு ஒப்புதலுக்குத் தடுப்பூசியின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றிய தகவல்கள் அவ்வப்போது சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டும், தடுப்பூசியின் நன்மைகள் – தீமைகளின் ஒப்பீடு நேர்மறையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார் டாக்டர் நூர் ஹிஷாம்.

“மலேசியாவில் கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்புகளுக்கான அணுகலை மேம்படுத்துவதில் சுகாதார அமைச்சு எப்போதும் உறுதியாக உள்ளது, அவை தேசிய மருந்து ஒழுங்குமுறை பிரிவின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு டிசிஏ-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா