கட்டாயத் தொழிலாளர் பிரச்சினை : ‘வெளிநாடுகள் புதிய தடைகள் விதிக்கும் வரை காத்திருக்க வேண்டாம்’

நாட்டில் கட்டாயத் தொழிலாளர் நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, அந்தந்த நாடுகளின் தலையீடு இருக்க வேண்டும் என்று கூறியுள்ள மனித வளத்துறை அமைச்சர் எம் சரவணனை, பினாங்கு துணை முதல்வர் பி இராமசாமி கடுமையாக சாடினார்.

இராமசாமியின் கூற்றுப்படி, மலேசியாவில் கட்டாயத் தொழிலாளர் நடைமுறைகளை எதிர்த்துப் போராடுவதில் உண்மையில் ஆர்வம் காட்டுவதை விட, மனித வள அமைச்சு வெளிப்புறக் காரணிகளுக்கு அதிகப் பதிலளிப்பதாகத் தெரிகிறது.

பல உள்ளூர் கையுறை நிறுவனங்கள், அமெரிக்காவால் ஏற்றுமதித் தடை விதிக்கப்பட்ட பின்னரே அரசாங்கம் செயல்பட்டதாக அவர் கூறினார்.

“இந்த நாட்டில் கட்டாய உழைப்பு பிரச்சனை இருப்பதைச் சரவணன் திடீரென உணர்ந்துள்ளார்.

“அனைத்து துறைகளிலும், குறிப்பாக ஏற்றுமதி துறையில், பல்வேறு வடிவங்களில் கட்டாயத் தொழிலாளர் நடைமுறைகள் உள்ளன என்பதைச் சரவணன் அறிந்திருக்க வேண்டும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

கையுறை தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்கள் “அதிர்ஷ்டசாலிகள்” என்று அவர் விவரித்தார், ஏனெனில் கையுறைகளை இறக்குமதி செய்யும் நாடுகள் இத்துறையில் வேலை செய்யும் சூழ்நிலை தொட்டு, தங்கள் கருத்துக்களையும் மேம்பாடுகளையும் தெரிவிக்க முடிந்தது.

“(ஆனால்) உள்ளூர் பயன்பாட்டிற்குப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் நிலை என்ன?” என்னவென்று அவர் கேள்வி எழுப்பினார்.

சரவணனால் அறிமுகம் செய்யப்பட்ட தேசியக் கட்டாயத் தொழிலாளர் செயல் திட்டம், அடுத்த மாதம் தொடங்கவுள்ளதை தொடர்ந்து இராமசாமியின் அறிக்கை வெளியாகியுள்ளது.

கையுறை உற்பத்தியாளரனா சூப்பர்மெக்ஸ் கோர்ப் (Supermax Corp) நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் கட்டாயத் தொழிலாளர் நடைமுறைகள் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்தது.

கடந்த ஜூலை மாதம், மலேசிய சூப்பர்மெக்ஸ் நிறுவத்தின் பெரிய போட்டியாளரான டாப் க்ளோவ் தொழிற்சாலைக்கு – உலகின் மிகப்பெரிய இரப்பர் கையுறைகளை உருவாக்கும் – இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு துறை மூலம் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, ஆனால், அந்நிறுவனம் சிக்கலை தீர்த்த பிறகு கடந்த மாதம் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

பாம் ஆயில் தயாரிப்பாளர்களான சைம் டார்பி பிளான்டேஷன் மற்றும் எஃப்ஜிவி ஹோல்டிங்ஸ் போன்ற நிறுவனங்களும் கடந்த ஆண்டு, இதுபோலவே தடை செய்யப்பட்டன.

இந்த நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளிடம் இருந்து அரசியல் தீர்மானம் இல்லாதது குறித்தும் இராமசாமி கேள்வி எழுப்பினார்.

“இந்த நாட்டில் தொழிலாளர் சட்டங்களை மீறும் முதலாளிகளை (குற்றங்கள்) பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, தண்டிக்க அரசுக்கு அரசியல் விருப்பம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள சரவணன் தயாரா?

“கொடுங்கோன்மை முதலாளிகளை, குறிப்பாக ஏற்றுமதி துறையில் உள்ளவர்களை ஏன் அமலாக்க அமைப்புகள் எதிர்க்க மறுக்கின்றன?” என்று அவர் மீண்டும் கேள்வி எழுப்பினார்.

கட்டாயத் தொழிலாளர் நடைமுறையை அகற்றுவதற்காக, பிற ஒழுங்குமுறை வழிமுறைகளால் நிரப்பப்பட்ட “பல தொழிலாளர் சட்டங்கள்” இருந்தாலும், அதைச் செய்பவர்களுக்கு எதிராக செயல்பட அரசாங்கம் தயங்குவதாகத் தெரிகிறது என்று இராமசாமி கூறினார்.

மலேசியா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நிலையில், தற்போது நிலவும் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதைப் பொதுமக்களிடம் விளக்குமாறு சரவணனிடம் அவர் கேட்டுக்கொண்டார்.