`ஒற்றையர்கள் மலேசியக் குடும்பப் பண உதவி பெற முடியாது` – ஜஃப்ருல் மறுப்பு

பட்ஜெட் 2022 | 2022 பட்ஜெட்டின் கீழ், மலேசியக் குடும்ப உதவித் திட்டம் (பிகேஎம்) என மறுபெயரிடப்பட்ட நேரடி பண உதவியைப் பெறுவதற்கு ஒற்றையர்களுக்கு தகுதி இல்லை என்பதை நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் மறுத்தார்.

“சமூக ஊடகங்களில் பலர் கேட்கிறார்கள், இந்த மலேசியக் குடும்ப உதவி ஒற்றையர்களுக்குக் கிடைக்காதா என்று?

“கிடைக்கும். பட்ஜெட் உரை உண்மையில் #கெலுவார்காமலேசியா-விற்கு வழங்கப்படும் பல்வேறு உதவிகளின் ஒரு பகுதி.

“அவற்றையெல்லாம் பட்டியலிட விரும்பினால், இன்று இரவு வரை எங்கள் உரையை முடிக்க முடியாமல் போகலாம்,” என்று அவர் நேற்றிரவு முகநூல் பதிவு ஒன்றில் கூறினார்.

“ஆனால் 2022 பட்ஜெட்டில், சமூகத்தின் அனைத்து மட்டங்களுக்கும் அனைத்து வகையான உதவிகளும் உள்ளன,” என்று அவர் விளக்கினார்.

அந்தச் சமூக ஊடகப் பதிவில், ஒற்றை மூத்த குடிமக்கள் அல்லது RM5,000-க்கும் குறைவாகச் சம்பாதிக்கும் தம்பதிகள் RM600 உதவியைப் பெறத் தகுதியற்றவர்கள், அதே நேரத்தில் RM2,000-க்கும் குறைவாக சம்பாதிக்கும் ஒற்றைக் குடிமக்கள் RM350 பெறுவார்கள் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, ​​முந்தையப் பண உதவியில் இருந்து சில மேம்பாடுகளுடன், அரசாங்கம் பிகேஎம்-ஐ அறிமுகப்படுத்துகிறது என்று ஜஃப்ருல் அறிவித்தார்.

இந்த முன்முயற்சியின் மூலம், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் மாதம் RM2,500 -க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் ஒருமுறை மட்டுமே RM2,000 பண உதவியைப் பெறுவார்கள்.

பிகேஎம்-இன் கீழான மானியமானது, RM1,800-உடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பு ஆகும், இது முன்னர் பந்துவான் பிரிஹாத்தின் ரக்யாட்டின் (பிபிஆர்) மிக உயர்ந்த விகிதமாகும் என்றார் அவர்.

ஒரு மாதத்திற்கு RM5,000 வரை சம்பாதிக்கும் ஒற்றைப் பெற்றோருக்கு அரசாங்கம் மேலும் RM500 வழங்கும், அதாவது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஒற்றைப் பெற்றோர், பிகேஎம்-இலிருந்து அதிகபட்சமாக RM2,500 பண உதவியைப் பெறத் தகுதியுடையவர்கள்.

“ஒட்டுமொத்தமாக, 8.2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில், 9.6 மில்லியனுக்கும் அதிகமான பெறுநர்கள் பிகேஎம்-ஆல் பயனடைவார்கள், பிபிஆர்-இன் கீழ் ஒதுக்கப்பட்ட 7 பில்லியன் ரிங்கிட், 8.6 மில்லியன் பெறுநர்களுடன் ஒப்பிடும்போது இது அதிகm aakum,” என்று அவர் நேற்று மக்களவையில் 2022 பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது விளக்கினார்.

சமூக நலத் துறையால் வழங்கப்படும் உதவிக்கான தகுதி நிபந்தனைகள் 2019 உணவு வறுமைக் கோட்டின் அடிப்படையில் RM1,169 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று ஜஃப்ருல் நேற்று மேலும் கூறினார்.

 

“சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள், தற்போதைய அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு, உதவி தேவைப்படுபவர்களின் கைகளைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க உள்ளது,” என்று அவர் கூறினார்.