நேற்று, புத்ராஜெயாவில் தாக்கல் செய்யப்பட்ட 2022 பட்ஜெட் குறித்து மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வருத்தம் தெரிவித்தது. அதில் ‘சுவாரஸ்யமான மற்றும் புதிய’ கூறுகள் எதுவும் இல்லை என்று அது விவரித்தது.
“இந்தப் பட்ஜெட் சற்று ஏமாற்றம் அளிக்கிறது, ஏனெனில் இந்த முறை பட்ஜெட் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும், நாங்கள் அதில் மிகச் சிறந்ததை எதிர்பார்த்தோம்.
“ஆனால், எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லாத புதிய அமைச்சரவையைப் போல், இந்த முறை வரவுசெலவுத் திட்டத்திலும் வழக்கத்திற்கு மாறாக ஏதும் இல்லாமல் போனது, முந்தையப் போக்கையே இதுவும் பின்பற்றுகிறது,” என்று பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் நேற்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் சமர்ப்பித்த 2022 வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்தார்.
2022 பட்ஜெட்டில், பிஎஸ்எம்-ஐ ஏமாற்றிய விஷயங்களை அருட்செல்வன் பட்டியலிட்டுள்ளார், அவற்றில் குறைந்தபட்ச ஊதியத்தை அரசாங்கம் நேரடியாகத் தொடவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“சுகாதாரத் துறையில் ஒரு சிறிய முன்னேற்றம் மட்டுமே உள்ளது, மேலும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு இடமளிக்கும் வகையில் பல மாநிலங்களில் இரண்டாவது அரசு மருத்துவமனைகள் கட்டப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட, 1.47 விழுக்காடு அதிகமாக, சுகாதார அமைச்சுக்காக 32.4 பில்லியன் ரிங்கிட் ஒதுக்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை அருட்செல்வன் குறிப்பிட்டார்.
மூலதன ஆதாய வரி இல்லை
புதிய வரிகள் விதிக்கப்பட உள்ள போதிலும், மூலதன ஆதாயங்களுக்கு வரி விதிக்கும் திட்டம் இல்லை என்றார்.
“பண்டோரா பேப்பர் ரிப்போர்ட்டில் நாம் பார்த்தது போல் வரியைத் தவறவிட்டவர்கள் பற்றி என்னவானது?
“பல பணக்காரர்கள் வரி செலுத்துவதில் இருந்து தப்பியுள்ளார்கள், இது கவனிக்கப்படாமல் உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், உயர்க்கல்வி நிறுவனங்களில் உள்ள ஒவ்வொரு பி40 குடும்ப மாணவருக்கும் (40 விழுக்காட்டிற்கும் குறைவானவர்கள்) வரைப்பட்டிகை (தேப்லட்) மற்றும் பி40 குழுவைச் சேர்ந்த 130,000 இளம் பெண்களுக்கு அடிப்படை சுகாதாரக் கருவிகளை வழங்கும் அரசாங்கத்தின் இரண்டு திட்டங்களில் பி.எஸ்.எம். மகிழ்ச்சியடைவதாக அருட்செல்வன் கூறினார்.