மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவின் (மித்ரா) நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 17 நிறுவன இயக்குநர்களில், 11 பேரின் காவலுக்கு நீட்டிப்பு பெற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தவறிவிட்டது என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.
அவர்களில் 11 பேர், புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்று அந்த இயக்குநர்களில் ஒருவரைப் பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் அஷீக் அலி மலேசியாகினியிடம் கூறினார். முன்னதாக, எம்ஏசிசி அவர்களின் காவலை ஏழு நாட்கள் நீட்டிக்க விண்ணப்பித்திருந்தது.
“இன்று 12 சந்தேக நபர்கள் புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர், பதினொரு பேர் தலா 5,000 ரிங்கிட் முதல் 8,000 ரிங்கிட் வரை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
“சந்தேக நபர்களில் ஒருவர் மட்டுமே நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்,” என்று அஷீக் மலேசியாகினியிடம் கூறினார்.
மேலும், ஐந்து சந்தேகநபர்கள் முன்னதாக விடுவிக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள, 17 நிறுவனங்களின் இயக்குநர்களை எம்ஏசிசி கைது செய்ததாக செவ்வாயன்று தகவல் வெளியானது.
அஷீக், வழக்கறிஞர் ஹரஷான் ஜமானியுடன் சேர்ந்து, மித்ரா நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நிதியில், நிதியைப் பெறும் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், தங்கள் வாடிக்கையாளர்கள் எந்த வகையிலும் ஈடுபடவில்லை என்று வாதிட்டார்.
“எனவே, காவல் நீட்டிப்புக்கான எம்ஏசிசியின் விண்ணப்பம் தகுதியற்றது. எங்கள் வாடிக்கையாளருக்கும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன.
“எங்கள் வாடிக்கையாளரின் உடல்நிலையையும் எம்ஏசிசி விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பதையும் கருத்தில் கொண்டு, காவலை நீட்டிப்பதற்கான விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது. எங்கள் வாடிக்கையாளரை ஒருவர் உத்தரவாதத்துடன், RM5,000 ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது,” என்று அவர் கூறினார்.
இந்தியச் சமூகத்திற்கான சமூகப்-பொருளாதாரத் திட்டங்களை ஒழுங்கமைக்க, மித்ரா மானியத்திற்கான விண்ணப்பத்தின் மூலம், பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக மதிப்பிட்ட ஆதாரங்களைப் பெர்னாமா முன்னர் மேற்கோள் காட்டியது.
இந்த வழக்கின் விசாரணையானது, 2018-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மித்ராவால் அனுப்பப்பட்ட அனைத்து விண்ணப்பங்கள் மற்றும் செலவினங்களை உள்ளடக்கும் என்று கூறப்படுகிறது.
எம்ஏசிசி சட்டம் 2009-ன் பிரிவு 16 (ஏ) மற்றும் பிரிவு 18-ன் படி, இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் ஆசாம் பாக்கி தெரிவித்தார்.