மலாக்காவில் மஇகா வேட்பாளரை நிறுத்தும் – விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தினார்

பிஆர்என் மலாக்கா | அடுத்த மாதம் நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), மஇகா தனது வேட்பாளரை நிறுத்தும் என மஇகா தலைவர் எஸ்ஏ விக்னேஸ்வரன் உறுதிபடத் தெரிவித்தார்.

மஇகா மத்தியச் செயற்குழு மலாக்காவில் போட்டியிடப்போவதில்லை என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தியை அடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

“இதுபோன்ற செய்தியை யார் பரப்பினார்கள் என்று தெரியவில்லை. அதில் உண்மையில்லை.

“மஇகா மலாக்கா பிஆர்என்-இல் போட்டியிடும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

காடெக் சட்டமன்றத் தொகுதியில், மஇகா தொடர்ந்து போட்டியிடும் என்று தெரிகிறது. 2018-இல், மஇகா வேட்பாளர் பி பன்னீர்செல்வம், பக்காத்தான் ஹராப்பான் சார்பில் டிஏபி வேட்பாளர் ஜி சாமிநாதனிடம் 307 வாக்குகள் பெரும்பான்மையில் தோல்வியடைந்து, அந்த இடத்தை இழந்தார்.

அங்கு மற்றொரு வேட்பாளரான எம்ரன்ஸ்யா இஸ்மாயில் 1,865 வாக்குகள் பெற்றார்.

கடந்த பொதுத் தேர்தலில், மாநிலத் தொகுதியில் மொத்தம் 12,922 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர்.

தற்போது மலாக்காவில் போட்டியிட, சிறந்த வேட்பாளர்களை மஇகா இன்னும் அடையாளம் கண்டு வருகிறது என்றார் விக்னேஸ்வரன்.

“வேட்பாளர்களை அடையாளம் காணும் பணி இன்னும் நடந்து வருகிறது. விரைவில் வேட்பாளர்களை அறிவிப்போம்,” என்று அவர் கூறினார்.

தேர்தல் ஆணையம் நவம்பர் 20-ஆம் தேதியை, மலாக்கா பிஆர்என்-க்கான வாக்குப்பதிவு நாளாகவும், நவம்பர் 8-ஆம் தேதியை வேட்புமனுத் தாக்கல் நாளாகவும், நவம்பர் 16-ஆம் தேதியை முன்கூட்டியே வாக்களிக்கும் நாளாகவும் நிர்ணயித்துள்ளது.