அமைச்சர் : நாட்டின் சுகாதாரச் செலவுகளைச் செலுத்த உதவும் ‘மக்முர் வரி’

2022 வரவு செலவுத் திட்டத்தில், ‘மக்மூர் வரி’யை (வளமான வரி) அமுல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையானது, கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில் நாட்டின் உயர் சுகாதாரச் செலவுகளுக்கு நிதியளிக்க உதவும்.

நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கூறுகையில், அரசாங்கம் முழுமையான ஆய்வு நடத்தி, துறை சார்ந்த நிபுணர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

“நாங்கள் ஒரு முழுமையான (விரிவான) அணுகுமுறையை எடுக்க விரும்புகிறோம். மற்ற நாடுகளில், இது ‘முற்போக்கான வரி’ அல்லது ‘செழிப்பு வரி’ என்று அழைக்கப்படுகிறது … எனவே, தொற்றுநோய்களின் போது அசாதாரண இலாபம் ஈட்டிய நிறுவனங்களை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம்,” என்று அவர், நேற்று இரவு, பெர்னாமா மற்றும் ஆஸ்ட்ரோ அவாணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட ‘பட்ஜெட் 2022 : மக்களிடம் இருந்து மக்களுக்கு’ என்ற சிறப்பு நேர்காணலில் கூறினார்.

மேலும் விளக்கமளிக்கும் வகையில், ஆய்வைத் தொடர்ந்து, RM100 மில்லியனுக்கும் அதிகமான இலாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு, 2022 மதிப்பீட்டு ஆண்டிற்கான ‘ஒரே முறை’ அடிப்படையில், 33 விழுக்காடு வருமான வரி விதிக்கப்படலாம் என்று அரசாங்கம் கருதுகிறது என்று தெங்கு ஜஃப்ருல் கூறினார்.

முதல் RM100 மில்லியனுக்கு, சம்பந்தப்பட்ட உள்ளூர் நிறுவனங்களுக்கு 24 விழுக்காடு வருமான வரி விதிக்கப்படுகிறது.

அவரைப் பொறுத்தவரை, வரி வசூல் மற்றும் செயல்படுத்தும் முறைகள் பற்றிய அம்சத்தை எழுப்பிய இளைஞர்கள் உட்பட, பல்வேறு தரப்பினருடன் நிதி அமைச்சின் பல சந்திப்புகளின் விளைவாகவும் இந்த வரி முன்மொழிவு உள்ளது.

“பெறப்பட்ட முன்மொழிவுகளில், அசாதாரண ஆதாய வரி மற்றும் மூலதன ஆதாய வரி ஆகியவை அடங்கும், மேலும் நாங்கள் இரண்டையும் கருத்தில் கொண்டுள்ளோம்.

“(இருப்பினும்) மூலதன ஆதாய வரியை நடைமுறைபடுத்துவது சற்று கடினமாக உள்ளது, ஏனெனில் இது பங்குச் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், எங்களிடம் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்களான ஊழியர் வருங்கால வைப்பு நிதி, பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட், தாபோங் ஹஜி மற்றும் ஆயுதப்படை வாரியம் போன்றவையும் உள்ளன,” என்று அவர் சொன்னார்.

அசாதாரண இலாப வரி குறித்து கருத்து தெரிவித்த அவர், அமைச்சின் கூட்ட அமர்வில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் இதுவும் உள்ளதாக கூறினார்.

“சிலர் கையுறை நிறுவனங்கள் மீது திணிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

“இருப்பினும், நாம் கொள்கையளவில் பார்த்தால், இந்தத் தொழில்களில் ஒன்றின் மீது அசாதாரண இலாப வரியை விதிக்கும் (நடவடிக்கை) அந்நிய நேரடி முதலீடு வரவை பாதிக்கும்.

ஏனெனில், அதிக இலாபம் ஈட்டினால், தங்களுக்கும் வரி விதிக்கப்படும் என, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நினைப்பார்கள்,” என்றார்.

-பெர்னாமா