பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவரான பிகேஆர் தலைவர், அன்வார் இப்ராஹிம், அடுத்த மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) இட்ரிஸ் ஹரோன், நோர் அஸ்மான் ஹாசன் மற்றும் நூர் எஃபண்டி அஹ்மத் ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுடன் பணியாற்ற இன்னும் தயாராக இருக்கிறார்.
நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சனில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், கடந்த ஆண்டு பிஎச் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் அவர்கள் மூவரும் “ஷெரட்டன் நடவடிக்கையில்” ஈடுபடவில்லை என்றார்.
அதற்குப் பதிலாக, அவர்கள் இப்போது வாக்காளர்கள் வழங்கிய ஆணையை பிஎச்-க்குத் திருப்பித் தர விரும்புகிறார்கள் என்று அன்வார் கூறினார்.
“மக்களின் நம்பிக்கையை ஏமாற்றிய ஷெரட்டன் நடவடிக்கை போன்ற ஒரு குழுவுடன் மக்கள் அவர்களைக் குறிப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
“அவர்கள் பக்காத்தான் ஹராப்பானுக்குத் திரும்ப விரும்புகிறார்கள்,” என்று அன்வர் கூறினார்.
இட்ரிஸ் மற்றும் நோர் அஸ்மான் ஆகியோர் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், அவர்கள் மலாக்கா முதல்வர் சுலைமான் அலிக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எஃபெண்டி, பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர் ஆவார், அவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஷெரட்டன் நடவடிக்கையில் ஈடுபட்டதை எஃபெண்டி முன்பு ஒப்புக்கொண்டார்.
இரண்டு பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்களும், பிகேஆர் மற்றும் டிஏபியில் இருந்து தலா ஒருவரும் அப்போதைய முதல்வர் அட்லி ஜஹாரிக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதை அடுத்து, மார்ச் 9, 2020-ல் மலாக்காவில் பிஎச் அரசாங்கம் சரிந்தது.
மேலும் கருத்து தெரிவித்த அன்வார், சுலைமானுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கு முன்பு இட்ரிஸ், நோர் அஸ்மான் மற்றும் எஃபெண்டி ஆகியோர் மலாக்கா பிஎச் தலைவர்களைச் சந்தித்ததாகக் கூறினார்.
அப்போது ஏற்பட்ட புரிந்துணர்வு அடிப்படையில், அவர்கள் மூவரும் மலாக்காவில் உள்ள பிஎச்-க்குப், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதாக அன்வார் கூறினார்.
எவ்வாறாயினும், புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் சட்டமன்றத்தைக் கலைக்குமாறு சுலைமான், மலாக்கா யாங் டி-பெர்த்துவா நெகிரி, முகமட் அலி ருஸ்தாமை சம்மதிக்க வைத்ததால் அது நடக்கவில்லை.
“எனவே, இப்போது சமூக ஊடகங்களில் சிலர் எதிர்பார்த்ததைப் போல (அவர்களை) நிராகரிப்பதில் சிக்கல் உள்ளது.
“இரண்டாவதாக, அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். அவர்கள் அவர்தம் கட்சியால் நீக்கப்படுவார்கள் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.
“எனவே, நாங்கள் அவர்களை அப்படியே ஒதுக்கி வைக்க முடியாது. நாங்கள் முடிவெடுப்பதற்கு முன்பு இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டு மலாக்காவில் உள்ள தலைமையுடனும் பிஎச் தலைமையுடன் விவாதிக்க வேண்டும்,” என்று அன்வர் கூறினார்.