பெர்சத்துவின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான, முன்னாள் மந்திரி முகமட் ரெட்சுவான் முகமட் யூசோப், அவரது கட்சி “தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டது” என்று விவரித்தார்.
அடுத்த மாதம், மலாக்கா மாநிலத் தேர்தல் (பிஆர்என்) வேட்பாளர் நியமனத்திற்குப் பிறகு, தான் ஓர் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ரெட்சுவான் தெரிவித்தார்.
ஆனாலும், தான் கட்சி மாறப்போவதாகப் பரவிவரும் ஊகங்கள் பற்றியது அல்ல அது என்று மறுத்தார்.
“நாங்கள் இரண்டாவது தொடருக்காகக் காத்திருக்கிறோம், இந்த நவம்பர் வரை காத்திருக்க வேண்டும், நான் மலாய் சட்டை அணிவேன், நான் எந்த நிறத்தை தேர்தெடுப்பேன் என்பதைப் பின்னர் அறிவிப்பேன்,” என்று அவர் கூறியதாக மாநில அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான மலாக்கா ஹரி இனி கூறியது.
முன்பு, அவர் சிறப்புப் பணிகளுக்குப் பொறுப்பான பிரதமர் துறையில் அமைச்சராக இருந்தபோது, முஹைதின் யாசினின் கோவிட் -19 தொற்றுநோய்க்கான அரசாங்க நிர்வாகத்தை ரெட்சுவான் விமர்சித்தார்.
முஹைதீன் பெர்சத்துவின் தலைவர்.
அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராகப் பதவியேற்றபோது ரெட்சுவான் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவர் மலாக்கா பெர்சத்து தலைவராக இருந்தார், ஆனால் அவரது தலைமைத்துவ பாணி குறித்து அடிமட்ட உறுப்பினர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டார்.
இப்பதவி முகமட் ரபீக் நைசாமோஹிதீனிடம் ஒப்படைக்கப்பட்டது.
அலோர் காஜாவின் நாடாளுமன்ற உறுப்பினரான ரெட்சுவான், பெர்சத்துவுடன் தான் தொடர்ந்து நிலைத்திருப்பதாகக் கூறினார்.
மகாதீர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, மகாதீரின் குழுவில் இணைவது குறித்து ரெட்சுவான் முன்னர் சிந்தித்திருந்தார், ஆனால் இறுதியில் அது நடக்கவில்லை.