பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றதையடுத்து, நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலுக்குத் தலைமை தாங்கும் யாங் டி-பெர்த்துவா (ஒய்டிபி) நெகிரி முகமட் அலி ருஸ்தாமுடன், பெங்கராங் எம்.பி. அஸலினா ஒத்மான் சைட் நேற்று ஒரு சந்திப்பை நடத்தினார்.
தேசிய அளவில் கட்சி தாவல் எதிர்ப்பு சட்டங்களை உருவாக்குவதைத் தவிர, மாநில அளவிலும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார் அவர்.
“மலேசியாவில் ஜனநாயக அமைப்பை நிலைநிறுத்தி, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை நிலைநிறுத்தவும், வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்களை வேட்பாளர்கள் மதிப்பதை உறுதிப்படுத்தவும் இது முக்கியம்.
“இது சம்பந்தமாக, கட்சி தாவல் ஒழுங்குமுறை மற்றும் அரசியல் பொறுப்புக்கூறல் மசோதாவை மலாக்கா மாநில அளவில் யாங் டி-பெர்த்துவா நெகிரியின் பரிசீலனை மற்றும் அனுமதியுடன் செயல்படுத்த வேண்டும் என்று நான் பணிவுடன் தெரிவிக்கிறேன்.
“மலாக்கா மாநில அளவில் இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கு எனது சேவைகளையும் சில குழுவினரையும் நான் வழங்கியுள்ளேன்,” என்று முகமட் அலியுடனான தனது சந்திப்பு குறித்து, நேற்று தனது முகநூல் பதிவில் அஸலினா கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் விலகுவதைத் தடுப்பதற்கும் அதற்குப் பதிலாக வாக்காளர்களுக்குக் குரல் கொடுப்பதற்கும் ஒரு பொறிமுறையை வழங்கியதால், கலப்பின (ஹைபிரிட்) மசோதா மலாக்காவில் அரசியல் நிலைத்தன்மைக்கு ஓர் ஊக்கியாக இருக்கும் என்றும் அஸலினா நம்பினார்.
நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலின் வேட்புமனுத் தாக்கல் நாள், நவம்பர் 8-ஆம் தேதி ஆகும்.