முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த, ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு உதவிய 1எம்டிபி ஊழலை அம்பலப்படுத்தியதற்காக தாம் ஒருபோதும் வருத்தப்படவில்லை என்று சரவாக் ரிப்போர்ட் -இன் ஆசிரியர் கிளேர் ரீவ்காஸில்-பிரவுன் வலியுறுத்தினார்.
அவரைப் பொறுத்தவரை, ஊழலின் வெளிப்பாடு அவரைச் சட்ட நடவடிக்கை மற்றும் துன்புறுத்தலுக்கு இலக்காக்கியது, ஆனால் அந்த முயற்சியில் அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை.
“இல்லை, துன்புறுத்தல் நான் சரியான செய்தியைச் செய்தேன் என்பதற்கான சமிக்ஞையாகும். நான் அத்தகைய எதிர்வினையைத் தூண்டியதால், நான் சரியானதைச் செய்தேன் என்று அது கூறுகிறது,” என்று 1எம்டிபி ஊழலை அம்பலப்படுத்தும் பல அறிக்கைகளை வெளியிட்டதற்கு வருத்தம் அடைந்தாரா என்று கேட்டபோது ரீவ்காஸில்-பிரவுன் இவ்வாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைக்கு முடிவுகட்டும் சர்வதேசத் தினத்துடன் இணைந்து, நேற்று இரவு சுதந்திர பத்திரிகைக்கான மையம் (சிஐஜெ), சுதந்திரத் திரைப்பட வலையமைப்பு (ஃப்.ஃப்.என்.) மற்றும் கெராக்கான் மீடியா மெர்டேக்கா (கெராம்) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் மன்றத்தில் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ரீவ்காஸில்-பிரவுன், உண்மையை நிலைநிறுத்துவதில் உள்ளூர் ஊடகவியலாளர்களின் தைரியத்தைப் பாராட்டியும் பேசினார், மேலும் உள்ளூர் பத்திரிகையாளர்களுக்கு இல்லாத சுதந்திரத்தை ஒரு வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர் என்ற வகையில் தனக்கு வழங்கிய சிறப்புரிமையை ஒப்புக்கொண்டார்.
உள்ளூர் அதிருப்தியாளர்கள் தனக்கு எதிராகப் பயன்படுத்திய சில மிரட்டல் தந்திரங்களை, மலேசிய அதிகாரிகள் பிரிட்டனுக்கு “ஏற்றுமதி” செய்ய முயற்சித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
ஆனால், நான் ஒரு பிரிட்டிஷ் குடிமகள் என்ற வகையில், மலேசிய அதிகாரிகளின் தந்திரோபாயங்களை அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு எட்ட முடியாது என்று அவர் கூறினார்.
“நான் இருக்கும் நிலையில் எனக்கு நிறைய பாதுகாப்பு உள்ளது. இதுபோன்ற தந்திரங்கள் இங்குள்ள அரசாங்கத்தால் இழிவாகவும், திகிலாகவும், வெறுப்பாகவும் கருதப்படுகின்றன.
“எனவே, பிரிட்டன் அல்லது ஐரோப்பாவில், ஒரு வெளிநாட்டிலிருந்து குற்றவியல் அவதூறு அச்சுறுத்தல்களைப் பெறும்போது, அவர்கள் எங்களிடம் இந்தச் சட்டம் இல்லை, மேலும் பத்திரிகையாளர்கள் அப்படி நடத்தப்படக்கூடாது என்றுதான் கூறுவார்கள்,” என்று சரவாக்கில் பிறந்தவரான ரீவ்காஸில்-பிரவுன் கூறினார்.
இதற்கிடையில், மலேசியாவில் பத்திரிகை சுதந்திரம் குறித்து கருத்து தெரிவித்த ரீவ்காஸில்-பிரவுன், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மலேசியாவில் சுயத் தணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறினார்.