மலேசியாவைச் சேர்ந்த நாகேந்திரன் கே தர்மலிங்கத்துக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை இரத்து செய்யக்கோரி, வழக்கறிஞர்கள் குழு ஒன்று, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரிடம் முறையிட்டனர்.
நேற்று பிற்பகல், கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள சிங்கப்பூர் உயர் ஆணையத்தின் முன் கூடிய மலேசிய வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் ஒரு மேல்முறையீட்டு மனுவைக் கையளித்தனர்.
இதில், மலேசிய வழக்கறிஞர் மன்றம், சரவாக் பார் அசோசியேஷன் மற்றும் சபா லோ சொசைட்டி ஆகியவைக் கூட்டாக கையெழுத்திட்டன.
வழக்கறிஞர் மன்றத் தலைவர் ஏ.ஜி.காளிதாஸ் கூறுகையில், அந்தக் கடிதத்தை மலேசியாவுக்கான சிங்கப்பூர் உயர் ஆணையர் வானு கோபால மேனன் பெற்றுக்கொண்டதாகக் கூறினார்.
அந்தக் கடிதத்தில் சிங்கப்பூர் அரசு இந்த வழக்கில் கருணை காட்ட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வழக்கறிஞர்கள் குழுவின் கூற்றுப்படி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஓர் இடத்தைப் பிடித்துள்ள மலேசிய அரசாங்கம், இந்தப் பிரச்சினையில் மௌனமாக இருப்பதில் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகக் கூறினர்.
“மலேசிய அரசாங்கத்திற்கான எங்கள் கேள்வி : இப்பிரச்சனைக்கு நீங்கள் என்ன செய்ய உள்ளீர்கள்?
“நாகேந்திரன் சார்பாக முயற்சிப்பதாக, மலேசிய அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் எந்தவொரு தகவலையும் இதுவரை பெறவில்லை. குறைந்தபட்சம் அரசாங்கம் இதில் தலையிட முயற்சிக்கலாம்,” என்று வழக்கறிஞர் மன்றத்தின் இணைத் தலைவர் ஆண்ட்ரூ கூ செய்தியாளர்களிடம் கூறினார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக புத்ராஜெயா தனது உறுதிப்பாட்டை நிலைநாட்ட வேண்டும் என்றும், நாகேந்திரனுக்குத் தண்டனை வழங்கப்படுவதைத் தடுக்க விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
கடந்த 2011-ம் ஆண்டு சிங்கப்பூரில் ஹெராயின் எனப்படும் 42.27 கிராம் டைமார்பைன் போதைப்பொருளைக் கடத்தியதற்காக நாகேந்திரன் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
இருப்பினும், நாகேந்திரனின் பாதுகாப்புக் குழு, தண்டனைக்குப் பிறகு அவரது மனநலக் குறைபாடு குறித்த பிரச்சினையை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
85-115 -க்கு இடைப்பட்ட சராசரி மனிதனின் ஐ.கியூ-ஐ விட குறைவாக 69 ஐ.கியூ. -உடன் எல்லைக்குட்பட்ட அறிவுசார் இயலாமை கொண்டவர் அவர் என நிபுணத்துவ மருத்துவரால் கண்டறியப்பட்டார்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா உடன்படிக்கையில் சிங்கப்பூர் கையெழுத்திட்டுள்ளது என்றும் அந்தக் குழு வலியுறுத்தியது.
நாகேந்திரனுக்கு நவம்பர் 10-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
மலேசியாகினியிடம் இந்த வழக்கைப் பகிர்ந்து கொண்ட அவரது குடும்பத்தினர், சிங்கப்பூர் அரசாங்கம் நாகேந்திரனின் உயிரைக் காப்பாற்றும் என்று நம்புவதாகக் கூறினர்.