நாடாளுமன்றம் | தனது பிரதமர் பதவியைத் தக்கவைக்க பக்காத்தான் ஹராப்பானிடம் இருந்து உறுதிமொழி பெற்றிருந்தாலும், இஸ்மாயில் சப்ரி இன்னும் தனது நடவடிக்கைகளில் தயக்கம் காட்டுவதாக முகமட் சாபு கூறினார்,
இன்று, மக்களவையில், 2022-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைப் பற்றி விவாதித்த முகமட், இஸ்மாயில் சப்ரி, தான் ஆட்சியில் இருப்பதையும், எந்த அச்சுறுத்தல்களாலும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் காட்ட வேண்டும் என்றார்.
“அடுத்தப் பொதுத் தேர்தல் வரையில், பிரதமர் வீழ்ந்துவிடாமல் இருக்க வேண்டும். எனவே, நீங்கள் கொஞ்சம் தைரியமாக இருக்க வேண்டும். எங்கள் பிரதமர் ஒரு பணயக்கைதி போல், சிலரால் கட்டுப்படுத்தப்படுவதைப் போல் தெரிகிறது. நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்,” என்றார் அவர்.
இஸ்மாயில் சப்ரியைக் கூட்டணி வீழ்த்தாது அல்லது 2022 பட்ஜெட்டை முறியடிக்காது என்று செப்டம்பர் 13-ம் தேதி, அரசாங்கத்துடன் பிஎச் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து முகமட் கூறினார்.
பல அம்னோ தலைவர்களின் முயற்சியால், பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், பெரா எம்.பி.யான இஸ்மாயில் சப்ரி பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இருப்பினும், அவரது கட்சி அமைப்பில், இஸ்மாயில் சப்ரி மூன்று அம்னோ உதவித் தலைவர்களில் ஒருவர். அவருக்கு மேலே அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தலைவராகவும், முகமட் ஹசான் துணைத் தலைவராகவும் உள்ளனர்.
மறுபுறம், அம்னோ தனித்து ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், இஸ்மாயில் சப்ரி, பெர்சத்து எம்.பி.க்களின் ஆதரவுடன் பிரதமரானார்,
மாநிலத் தேர்தல் தேதி நெருங்கி வந்த போதிலும், இஸ்மாயில் சப்ரி மலாக்கா அல்லது எஸ்.ஓ.பி. நடைமுறைகள் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை என்று முகமட் கூறினார்.
பிரதமர் என்ற முறையில் இஸ்மாயில் சப்ரி “மென்மையாக” இல்லாமல் அரசாங்கத்தை வழிநடத்தும் சக்தியைக் காட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“எந்தக் கட்சியிடமிருந்தும் மிரட்டல் வரக்கூடாது. அதனால்தான் இந்தப் பிரதமர் அடுத்த பொதுத் தேர்தல் வரை இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் (பிஎச்) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தோம், ஆனால் அவர் இப்போது மலேசியாவைக் காப்பாற்ற எதையும் செய்யத் துணியவில்லை,” என்று அவர் கூறினார்.