சிங்கப்பூரில் நாகேந்திரனுக்குக் கடைசி தீபாவளி

பொதுவாக, பண்டிகைக் காலம் உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்க்க வீடு திரும்புவதற்கான ஒரு நாள்.

ஆனால், பாஞ்சாலை சுப்ரமணியத்திற்கு அல்ல. இந்த வார இறுதியில், தன் மகன் நாகேந்திரன் கே தர்மலிங்கத்தைப் பார்க்க சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்பது அவருடைய ஒரே ஆசை.

ஏறக்குறைய மூன்று ஆண்டுகளில் இது அவர்களின் முதல் சந்திப்பு, அநேகமாக அவர்களின் கடைசி சந்திப்பும் இதுவாக இருக்கலாம்.

சாங்கி சிறைச்சாலையில், மரணத் தண்டனைக்காகக் காத்திருக்கும் கைதியான 33 வயது நாகேந்திரன், அடுத்த புதன்கிழமை (நவம்பர் 10) தூக்கிலிடபடவுள்ளார்.

துப்புரவுத் தொழிலாளியான, பாஞ்சாலைக்கு, 59, வருடாந்திர விடுப்பு அதிகம் இல்லை. தீபாவளி விடுமுறையைப் பயணத்திற்குப் பயன்படுத்தவுள்ளார்.

கடந்த வாரம் அக்டோபர் 26-ம் தேதி, சிங்கப்பூர் சிறைச்சாலைச் சேவை அலுவலகத்தில் இருந்து வந்த மின்னஞ்சல் மூலம், அவர்களது குடும்பத்தினர் மரண தண்டனை தேதியை அறிந்தனர்.

நாகேந்திரனின் மூத்த சகோதரி ஷர்மிளா தர்மலிங்கம், தனது சகோதரரின் உயிரைப் பறிக்கும் முன், இந்தச் செய்தியை முதன்முதலில் கேட்டபோது கதறி அழுதேன் – அவரை எங்களால் சந்திக்க முடியுமா இல்லையா என்ற கவலையில்.

தற்போது உலகை ஆட்டிப்படைத்து வரும் கோவிட்-19 தொற்றுநோயின் போதான, பயண விதிகள் பற்றி அவருக்குச் சரிவர தெரியவில்லை.

தேவையான அனைத்து அனுமதிகளையும் சரியான நேரத்தில் அவர்கள் பெறுவது எப்படி?

பயணச் செலவுகளை ஈடுகட்ட அவர்கள் கடன் வாங்க முடியுமா மற்றும் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டுமா?

“இது தீபாவளி விடுமுறை. நவம்பர் 10-ம் தேதி தண்டனையை வழங்க சிங்கப்பூர் அதிகாரிகள் எப்படி முடிவு செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

“இது சரியான நேரம் அல்ல, ஏனெனில் இது கோவிட் -19 தொற்றுநோய் காலம். குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வளவு கஷ்டம் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லை.

“நாங்கள் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல,” என்று அந்த இல்லத்தரசி மலேசியாகினியிடம் ஒரு தொலைபேசி பேட்டியில் கூறினார்.

அவர் கூறுகையில், நாளை நவம்பர் 4-ம் தேதி வரும் தீபாவளி பண்டிகைக்கான ஏற்பாடுகளுக்கு மீதமிருந்த உபரி பணம் அனைத்தும் செலவிடப்பட்டுள்ளது.

2011-ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் 42.72 கிராம் டயமார்பைனை விநியோகித்ததற்காக நாகேந்திரனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த ஹெராயின் டயமார்ஃபினிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

மலேசியாவில் உள்ள அவரது குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட உதவி என்ஜிஓவான லோயர்ஸ் ஃபார் லிபர்ட்டி (எல்.எஃப்.எல்.) கருத்துப்படி, நாகேந்திரனின் ஐ.கியூ. 69 மட்டுமே.

அந்தக் குறிப்பு, சராசரி மனிதனின் ஐ.கியூ.-வை விட மிகக் குறைவானது. எனவே, அவரை மந்தமான அல்லது அறிவுசார் குறைபாடு உள்ளவர் என வகைப்படுத்தலாம்.

நாகேந்திரனின் மரண தண்டனை தேதி அறியப்பட்டதிலிருந்து, பல குழுக்கள் சிங்கப்பூர் அரசாங்கத்தை மரண தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

அவற்றுள், மரணத் தண்டனைக்கு எதிரான ஆசிய வலைதளம் (The Anti-Death Penalty Asia Network (அட்பன்) நாகேந்திரனைத் தூக்கிலிடுவதன் மூலம், சிங்கப்பூர் சர்வதேச மரபுகளை மீறும் என்று வலியுறுத்துகிறது.

“ஒரு மந்தமான நபரைக் குற்றவாளியாகக் கண்டறிந்து, தண்டிக்க வேண்டும் மற்றும் தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்துவது, 2013-ஆம் ஆண்டில் குடியரசு அங்கீகரித்த மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐநா மாநாட்டின் கீழ் சிங்கப்பூரின் கடமைகளை மீறுகிறது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், எல்.எஃப்.எல். புத்ராஜெயாவைத் தலையிட வலியுறுத்தியது.

“நாகேந்திரனைத் தூக்கிலிடாமல் காப்பாற்ற, சிங்கப்பூர் அதிகாரிகளிடம் தேவையான கோரிக்கைகளை முன்வைக்க மலேசிய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

“இது சர்வதேச சட்டத்தைக் கடுமையாக மீறுவதாகும், மேலும், சர்வதேச நீதிமன்றத்தில் புகார் அளிக்க மலேசியாவுக்கு உரிமை உள்ளது,” என்று எல்.எஃப்.எல். நிர்வாக இயக்குநர் என் சுரேந்திரன் கூறினார்.

நாகேந்திரனுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்குப்பைக் கோரும் இயங்கலை மனுவும், இன்று மதியம் 1 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 32,000 கையெழுத்துகளைப் பெற்றுள்ளது.

மற்றொரு என்.ஜி.ஓ. குழு – சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கொலெக்டிவ் (Transformative Justice Collective)  – நாகேந்திரனைக் கடைசியாகக் காண அவரது குடும்பம் குடியரசுக்கு வருவதற்காக நிதி திரட்டும் பிரச்சாரத்தை நடத்துகிறது.

SG $9,900 என்ற இலக்கை விட, கிட்டத்தட்ட இருமடங்கு நிதியை அப்பிரச்சாரத்தால் திரட்ட முடிந்தது.

இந்த நிதியின் மூலம், அனைத்து ஆவணங்களையும் தயார் செய்ய, விமான டிக்கெட்டுகள், தங்குமிடம், உணவு, போக்குவரத்து மற்றும் பஞ்சாலை உட்பட அவரது குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களுக்கான RT-PCR சோதனை ஆகியவற்றை நிர்வகிக்க அந்தப் பணம் இப்போது பயன்படுத்தப்படும்.

நாகேந்திரனின் உடலைத் திருப்பி அனுப்புவது மற்றும் இறுதிச் சடங்குகள் ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

நிதி மற்றும் தளவாடச் சுமைகள் அவரது தோள்களில் இருந்து விலகிய நிலையில், ஷர்மிளா மிகவும் நன்றியுடனும் நிம்மதியுடனும் இருப்பதாகக் கூறினார்.

இருப்பினும், தனது குழந்தைகளையும் வீட்டையும் கவனித்துக்கொள்ள, பேராக், ஈப்போவிலேயே இருக்க வேண்டியிருப்பதால் அவர் சிங்கப்பூர் செல்ல மாட்டார்.

எந்த ஒரு சோகமான செய்தியையும் ஏற்கத் தயாராக இருந்தும், கடைசியாக நாகேந்திரனைக் காணொலி மூலம் காண ஆவலுடன் காத்திருந்தாலும், தனது சகோதரன் பாதுகாப்பாக மீண்டு வருவார் என்று ஷர்மிளா நம்புகிறார்.

“இது (தூக்கு தண்டனை) நடக்காது என்று நம்புகிறேன். அவர் வீட்டிற்கு திரும்பி வருவார் என நம்புகிறேன்,” என்றார்.

தீபாவளி என்றால் தீபங்களின் திருவிழா என்று பொருள். அவர் குடும்பத்தின் நம்பிக்கைகள் பிரகாசிக்குமா அல்லது இருளில் புலம்ப அவர்கள் தள்ளப்படுவார்களா என்பது இன்னும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது.