வழக்கறிஞர் சைமன் சியாவின் கூற்றுப்படி, அடுத்த ஆண்டு நாட்டில் வாக்களிக்கும் வயதைக் குறைக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால், மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகும் ஆபத்து உள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள், வாக்களிக்கும் வயதை 21 -லிருந்து 18-ஆகக் குறைக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்த கூச்சிங் உயர் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வச் சவாலில் வெற்றி பெற்ற ஐந்து சரவாக் இளைஞர்களைச் சைமன் சியா பிரதிநிதித்துவப்படுத்தினார்.
“ஆம், இது டிசம்பர் 31, 2021-க்குள் செயல்படுத்தப்படாவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும்,” என்று சியா நேற்று மலேசியாகினியிடம் கூறினார்.
அக்டோபர் 30-ம் தேதி, மலேசியர்களுக்கான வாக்களிக்கும் வயதைக் குறைப்பது அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் தொடங்கும் என்று கூறியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் உறுதிமொழி குறித்து அந்த வழக்கறிஞர் கருத்து தெரிவித்தார்.
வாக்களிக்கும் வயதைக் குறைப்பது தொடர்பான கூட்டாட்சி அரசியலமைப்பின் திருத்தங்களை உடனடியாக அமல்படுத்த முடியாது என்று மக்களவையிடம் கூறிய பிரதமர் துறை அமைச்சர் வான் ஜுனைடி துவான்கு ஜாஃபர் வெளியிட்ட செய்தி அறிக்கை குறித்தும் சியா கருத்து தெரிவித்தார்.
வாக்காளர் பதிவு உட்பட பல விஷயங்களை ஆய்வு செய்து, அதைச் சீராக செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்களவையிடம் வான் ஜுனைடி கூறினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் போது கூட்டாட்சி அரசியலமைப்பின் 119-வது பிரிவு தொடர்பான திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்டன. அரசியலமைப்பு (திருத்தம்) சட்டம் 2019-இன் பிரிவு 3 மூலம் திருத்தம் செய்யப்படுகிறது.
செப்டம்பர் 3-ம் தேதியிட்ட கூச்சிங் நீதிமன்ற உத்தரவின் நகலின் படி, அடுத்த ஆண்டு செப்டம்பர் 22 -க்குப் பிறகு பிரிவு 3-ஐ அமல்படுத்துவதை ஒத்திவைக்கும் மூன்று பிரதிவாதிகளின் முடிவை இரத்து செய்ய ஒரு சான்றளிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதித்துறை மறுஆய்வுக்குப் பிரதமர் (பெயர் குறிப்பிடப்படவில்லை), மலேசிய அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகிய மூன்றும் இலக்காகியுள்ளனர்.
இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள், 3-வது பிரிவு விரைவில் நடைமுறைக்கு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முக்கியமான இந்த நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.