மலேசிய மருத்துவ மன்றம் (எம்எம்சி), ஜுல்பர்ஹான் ஒஸ்மான் சுல்கர்னியனின் மரணம் குறித்த, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பாய்வு செய்து, அவர்களின் தொழில்முறை நெறிமுறைகளை மேம்படுத்த முடியுமா என்பதைத் தீர்மானிக்கும்.
எம்எம்சி தலைவர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, யுனிவர்சிட்டி பெர்தஹானான் நேஷனல் மலேசியா (யுபிஎன்எம்) மாணவர்கள் தங்கள் வகுப்புத் தோழனாக இருந்த சுல்பர்ஹானைக் கொன்ற குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கண்டறிந்ததை அடுத்து இவ்வாறு கூறினார்.
சுல்பர்ஹானுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்த மருத்துவர் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலையை அதிகாரிகளுக்குத் தெரிவிக்காதது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
“தற்போது, பாதுகாப்பான மற்றும் நெறிமுறை நடைமுறையை உறுதிப்படுத்த போதுமானதாக இருக்கும் தொழில்முறை நடத்தை மற்றும் நல்ல மருத்துவ நடைமுறையின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டும்.
“இருப்பினும், எம்எம்சி நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும், ஏதேனும் முன்னேற்றங்கள் செய்ய முடியுமா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
எம்எம்சி என்பது நாட்டில் உள்ள மருத்துவப் பயிற்சியாளர்கள் சம்பந்தப்பட்ட நெறிமுறை சிக்கல்கள் மற்றும் தொழில்முறை தவறான நடத்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாகும்.
நீதிமன்றத்தில் சாட்சியங்களின் அடிப்படையில், யுபிஎன்எம் மாணவர் குழுவால் சித்திரவதைச் செய்யப்பட்ட சுல்பர்ஹானை, என்ன நடந்தது என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற பயத்தில் அம்மாணவர்கள் ஒரு தனியார் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளனர், பொது மருத்துவமனைக்கு அல்ல.
பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளிக்கும் போது, சித்திரவதையின் அறிகுறிகளைக் கிளினிக்கில் உள்ள மருத்துவர்கள் கண்டறிந்திருந்தால் ஜுல்பர்ஹானைக் காப்பாற்றியிருக்கலாம் என்று நீதிபதி அஸ்மான் அப்துல்லா கூறினார்.
“மருத்துவர்கள் கண்களை மூடிக்கொண்டு, அவரது ஆணுறுப்பு உட்பட அவரது உடல் முழுவதும் எரிந்திருக்கும் நிலையில், இறந்தவர் பயிற்சியின் போது வெடிப்புக்கு ஆளாகி இருக்கக்கூடும் என்று நம்பியிருக்கக்கூடாது, ஆனால் அவரது முகத்தில் எந்தத் தடயமும் இல்லை,” என்று நீதிபதி கூறினார்.
தான் அனுபவித்த சித்திரவதையின் விளைவாக ஜுல்பர்ஹான் இறந்துவிட்டார் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது, ஆனால் கொலை திட்டமிடப்படாதது என்று கண்டறிந்தது.
குற்றம் சாட்டப்பட்ட முஹம்மது அக்மல் சுஹைரி அஸ்மல், முஹம்மது அஜாமுதீன் மட் சோஃபி, முஹம்மது நஜிப் முகமது ரஸி, முஹம்மது அபிஃப் நஜ்முதின் அஸாஹத், முகமது ஷோபிரின் சப்ரி மற்றும் அப்துல் ஹக்கீம் முகமது அலி ஆகிய ஆறு பேர் பயன்படுத்திய நீராவி இஸ்திரி பெட்டியால், 90 தீக்காயங்களுக்கு ஆளாகி, 2017-இல் ஜுல்பர்ஹான் இறந்து போனார்.
நோக்கமற்றக் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.