3-ஆம் கட்ட பிபிஎன்-இல் கிளந்தான், சரவாக் மட்டுமே

பெர்லிஸ், பேராக், பினாங்கு, சபா மற்றும் கெடா ஆகிய ஐந்து மாநிலங்களும் நவம்பர் 8 முதல் தேசிய மீட்புத் திட்டத்தின் (பிபிஎன்) மூன்றாம் கட்டத்திலிருந்து நான்காம் கட்டத்திற்கு மாறும் என்று மூத்தப் பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹுசைன் கூறினார்.

சுகாதார அமைச்சு மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றம் (என்.எஸ்.சி.) மேற்கொண்ட தற்போதைய இடர் மதிப்பீட்டைக் கருத்தில் கொண்டு, ஐந்து மாநிலங்களுக்கான பிபிஎன் கட்டத்தை மாற்றுவதற்குக் கோவிட்-19 தொற்று மேலாண்மை சிறப்புக் குழு இன்று ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

“நான்காம் கட்டத்திற்குள் நுழையும் மாநிலங்களுக்கான எஸ்.ஓ.பி. முன்பு போலவே உள்ளது. சமீபத்திய எஸ்.ஓ.பி. விவரங்கள் என்.எஸ்.சி.-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.mkn.gov.my -இல் புதுப்பிக்கப்படும்,” என்று அவர் பிபிஎன் கட்ட மாற்றம் மற்றும் எஸ்.ஓ.பி. தளர்வு குறித்த அறிக்கையில் கூறினார்.

இன்று நடைபெற்ற கோவிட்-19 தொற்று மேலாண்மை சிறப்புக் குழுக் கூட்டம், ஹோட்டல் தனிமைப்படுத்தல் நிலையத்தைத், தனியார் தனிமைப்படுத்தப்பட்ட நிலையமாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்து, ஏழு நாட்களுக்குப் பிறகு செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

ஹிஷாமுடினின் கூற்றுப்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களின் நிர்வாகம் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா – NADMA) தயாரித்த தனியார் தனிமைப்படுத்தல் நிலையங்களைத் திறப்பது, இயக்குவது மற்றும் கண்காணிப்பதற்கான வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டது.

“தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கானக் கட்டணங்கள் இன்னும் நடைமுறையில் இருக்கும் அதே வேளையில், குடிமகன் அல்லாத ஒவ்வொரு பயணிக்கும் RM2,600 தொகையான கோவிட்-19 இயக்கச் செலவுகளின் சேகரிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது மற்றும் தனியார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கான கட்டணங்கள், நவம்பர் 15, 2021 அன்று நடைமுறைக்கு வந்த அதே விகிதத்தில் (நிலையான தொகுப்பு) உள்ளன,” என்று அவர் கூறினார்.

தனிமைப்படுத்தல் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட மலேசியர்களின் ஏழு குழுக்களுக்கான தனிமைப்படுத்தல் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொண்டதாகவும், கோவிட்-19 கண்டறிதல் திரையிடல் சோதனையானது சம்பந்தப்பட்ட மாநிலச் / மாவட்டச் சுகாதாரத் துறை மூலம் சுகாதார அமைச்சால் ஆல் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

  • பெர்னாமா